: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருடைய கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவருடைய சளி மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் நேற்று காலை 6.10 மணிக்கு பிரிந்தது.
எனினும் அவரது இறப்பு செய்தி நேற்று காலை 8.45 மணிக்குத்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதாவுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வைகோ, அவருடைய மகன் துரை வைகோ, நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் போய் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அது போல் இளையராஜா, நாசர், சத்யராஜ், கவுதமி, தியாகு, இமான் அண்ணாச்சி, விஜய், மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இடநெருக்கடியை கருத்தில் கொண்டு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அ
ங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் மீண்டும் மதியம் 2.45 மணிக்கு ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவர்களது உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
ஊர்வலம் வரும் வழி நெடுகிலும் பொதுமக்கள் கேப்டன் கேப்டன், இனி எப்போது பார்ப்போம் என மக்கள் கண்ணீரில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன. கேப்டன் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருந்தனர்.
விஜயகாந்தின் உடல் பூட்ஸ், வேட்டி சட்டை கழுத்தில் கட்சி துண்டுடன் வைக்கப்பட்டது.
விஜயகாந்த் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க இறுக்கமான முகத்துடன் வந்த முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகளை மகன்கள் சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் செய்தனர்.
இதையடுத்து குழிக்குள் இறக்கப்பட்ட அவரது உடலை கடைசியாக அவரது குடும்பத்தினர் பார்த்து கண்ணீர் சிந்தினர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.