AI தொழில்நுட்பத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு: ஜனாதிபதி

Date:

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது நாட்டின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

விஞ்ஞான துறையினூடாக இலங்கைக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் நினைவு தின விழாவை முன்னிட்டு நேற்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி   இதனைக் குறிப்பிட்டார்.

சிறந்த அறிஞரான ஸ்டென்லி விஜேசுந்தரவின் கொலையுடன் இந்த நாட்டில் உயர்கல்வி மற்றும் விஞ்ஞானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய மனித வளத்தை நாடு இழந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனுடன் இணைந்ததாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஸ்டென்லி விஜேசுந்தர AI மையத்தை (AI Corner) திறந்து வைக்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டென்லி விஜேசுந்தரவின் உருவச்சிலையை ஜனாதிபதி திறந்து வைத்ததுடன், பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரை என்பவற்றையும் ஜனாதிபதி வெளியிட்டார்.

இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன், செயற்கை நுண்ணறிவை முன்வைத்த முக்கிய நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு இடையே பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

ஏனெனில் இது வரம்பு இல்லாமல் பயன்படுத்தப்படுவதில் சிக்கல் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு முக்கிய நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய கூட்டத்தில் இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான முதல் சட்டத்தை ஐரோப்பிய யூனியன் முன்மொழிவதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இந்த தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு கையாள வேண்டும்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைசார் குழுவினருடன் கலந்துரையாடியிருந்தேன். இலங்கையில் முதன்முறையாக AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளோம்.

மேலும், விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 08 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை. நாம் முன்னேற வேண்டுமானால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, இரண்டு பாரிய முதலீடுகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி, அனல் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது. ஆனால், நிலக்கரியை கொண்டு வரவும் அனல் மின் நிலையங்களை நிர்மாணிக்கவும் இன்றும் பலர் பழகியுள்ளனர்.

இதை நிறுத்துவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தில் லஞ்சம் பெற முடியாது. ஆனால் இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு தடைகள் ஏற்படலாம்.

பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவின் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பெங்களூர் என்பன பெரிய டிஜிட்டல் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன.

அதை நம் நாட்டிற்கு கொண்டு வருவது அவசியம், எனவே பல புதிய நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். முதலாவதாக, இந்த அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் தொகையை செலவழிக்க தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கவுன்சில்( Technology and Innovation Council )என்ற பெயரில் ஒரு நிறுவனம் நிறுவப்படும்.

தொழில் நுட்பத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் ரூபாவை ஒவ்வொரு துறையினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல டிஜிட்டல் முகவர்நிலையத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, AI மையம் உருவாக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை நிறைவேற்றிய பிறகு, புதிய அறிவியல் பொருளாதாரத்தையும் பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...