வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை இஸ்ரேலியப் படைகளினால் தாக்குதலுக்குள்ளாகியதில் 108 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் பலர் காயமடைந்திருக்கின்றார்கள். இதன்காரணமாக மருத்துவமனைக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. 7000 பொதுமக்கள் மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளார்கள்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் கமல் அத்வான் மருத்துவமனை, கனரக வாகனங்களாலும் ஆயதமேந்திய வாகனங்களாலும் சுற்றி வளைத்திருக்கின்றன.
மருத்துவமனைக்கு வெளியே செல்லக்கூடிய வழியில் அனைத்து மக்களையும் துப்பாக்கிகளைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடாத்துகின்றது.
காசாவுக்கு மேற்கு பகுதியில் தற்போது 4 மருத்துவமனைகள் மாத்திரமே செயற்படுகின்ற நிலையில் அப்பகுதியில் உள்ள அம்பியூலன்ஸ் வாகனங்களில் 55 வாகனங்கள் சேவையின்றி முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஷிபா மருத்தவமனையிலும் இந்தோனேசியா மருத்துவமனையிலும் ஏற்பட்டது போன்றே தற்போது மீண்டும் மனித படுகொலைகள் நடப்பதாக பார்க்கப்படுகின்றன.
இதேவேளை மின்சாரம் இல்லாத காரணத்தினால் எந்தவிதமான அவசர சிகிச்சைகளையும் சத்திர சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரபா எல்லையிலே மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்ற நோயாளர்களில் 400 பேருக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படுகின்றது. இன்னும் 40,000இற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றார்கள்.
அதேநேரம் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க வேண்டுமாயின் எல்லா மருத்துவமனைகளுக்கும் எரிபொருட்கள், அவசரமாக வழங்கப்படுவதோடு மாற்றீடான மொபைல் மருத்துவமனைகளும் தேவையான மருத்துவ உபகரணங்களும் அவசரமாக அனுப்பப்பட வேண்டியது காயமடைந்த மக்களை பாதுகாக்கக்கூடிய அவசர தேவையாகும் என சற்றுநேரத்திற்கு முன் காசா சுகாதார அமைச்சின் நிர்வாக பணிப்பாளர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.