இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கொவிட் திரிபு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது ‘எக்ஸ்’ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லக்சம்பேர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட JN.1 கோவிட் திரிபு இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
Omicron Covid இன் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் இந்தியாவில் 2 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பரவிய JN.1 கோவிட் திரிபானது இந்தியாவின கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
JN.1 தொற்றி முதல் தொற்றாளி மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு்ளளார். அந்த நபர் கோவாவைச் சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் திரிபு கவனம் செலுத்த வேண்டிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தற்போது பரவி வரும் JN.1 கோவிட் திரிபு ஏற்கனவே இலங்கையின் சமூகத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, கடும் காய்ச்சல் தொடர்ந்து இருப்பது, சுவாசிப்பதில் சிரமம், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை JN.1 கோவிட் திரிபின் அறிகுறிகளாகும்.
இதன்காரணமாக, இந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பூஸ்டர் ஊசி மருந்துகளை பெறுவது பொருத்தமானது எனவும்,சிறந்த காற்றோட்டம் இல்லாத நெரிசலான, மூடப்பட்ட இடங்களுக்கு செல்பவர்கள் முகமூடி அணிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோவிட் வைரஸை சாதாரண வைரஸாகக் கருதக்கூடாது எனவும் இது நோயாளியை கடுமையாக பாதிக்கும், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சினைகள் உட்பட நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.