தெல்தோட்டை ஊடக மன்றமும், அருள்வாக்கி அப்துல் காதிர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து வை.எம்.எம்.ஏ. பள்ளேகம கிளையின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்திருந்த 2023ம் ஆண்டுக்கான அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் நினைவுப் பேருரை நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை (30) கொழும்பு, வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
‘மலையக வரலாறும், ஈழத்து இலக்கியமும்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நினைவுப் பேருரை நிகழ்வினை காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் தலைமையேற்று நடாத்தி வைத்தார்.
இவ்வருடத்திற்கான நினைவுப் பேருரையினை ‘மலையகக் கவிதை இலக்கியச் செல்நெறியும், மலையக அடையாள உருவாக்கமும்’ எனும் தலைப்பில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், பன்னூலாசிரியர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் அவர்களும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
மர்ஹும் எஸ்.எம்.ஏ. ஹஸன் ஆசிரியர் (கல்வி அதிகாரி) எழுதிய அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய நூலை இரு முறை அச்சிட்டு அதனை வெளியிட்ட கல்ஹின்னை தமிழ் மன்றத்திற்கு தெல்தோட்டை ஊடக மன்றமானது, ‘அருள்வாக்கி நேசன்’ விருது வழங்கி பாராட்டி கௌரவித்தது.
மேலும், அருள்வாக்கி அப்துல் காதிர் கலை, இலக்கியக் கழகத்தினால் நடாத்தப்பட்ட முகநூல் வாசகர்களுக்கான கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், உலமாக்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.