இந்தியாவின் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் ஏராளமான பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தினர்.
அதில் நட்சத்திர வேட்பாளராக முன்னின்று கட்சியின் வெற்றியை உறுதி செய்த பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
மூன்று மாநிலங்களில் கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குப் பிறகு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா கட்சித் தலைமையகத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரதமர் மோடியின் கடுமையான பிரசாரத்தைப் பாராட்டினார்.
2014 இல் பிரதமர் மோடியின் அரசாங்கம் அமைவதற்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி 7 மாநிலங்களில் வெறிபெற்றது.
அப்போது காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சி செய்தது. தற்போதைய நிலவரப்படி அதாவது, டிசம்பர் 2023 நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 18 மாநிலங்களில் ஆட்சி செய்யும் நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை ஒரு கையின் விரலுக்குள் அடங்கிவிட்டது.
5 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அதில் 3 இல் மட்டுமே பெரும்பான்மை உள்ளது.
உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2024 இந்திய மக்களவைத் தேர்தலுக்கு இந்த 4 சட்டமன்றத் தேர்தல்களும் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இந்திய அரசியலின் பாதையை வடிவமைக்கும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. மாநிலத்தில் நடைபெற்ற 119 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஒரே கட்டமாக நடந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மாநிலத்தில் தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தனித்து ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் வட இந்தியாவில் உள்ள மூன்று பெரிய மாநிலங்களில் பா.ஜ.க. தனது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.