‘எத்தனை ஆண்டுகளானாலும் இழந்த தாயகத்தை மீட்டே தீருவார்கள்’: பலஸ்தீனர்களின் வீரத்தையும் தீரத்தையும் கண்டு பிரமித்து நிற்கின்றோம்!

Date:

100 நாட்களை எட்டியுள்ள ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

காஸாவின் பலி எண்ணிக்கையும் அங்கு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களும் சிறியளவில் இஸ்ரேலில் விவாதத்தை ஏற்படுத்தினாலும் இதனைப் பழி வாங்கும் போராகத் தான் இஸ்ரேல் கருதுகிறது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவப்படையின் அத்துமீறலுக்கு மத்தியிலும்  பலஸ்தீன மக்களின் வீரத்தையும் தீரத்தையும் குறிக்கும் வகையில் ‘சமரசம்’ சஞ்சிகையில் வெளிவந்துள்ள உணர்வுபூர்வமான கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.

ஓ! ஃபலஸ்தீனர்களே! உங்கள் வீரத்தையும் தீரத்தையும் கண்டு பிரமித்து நிற்கின்றோம்.

தாய் மண்ணின் விடுதலைக்காக உலகின் நான்காவது சக்தி வாய்ந்த இராணுவத்தோடு நீங்கள் நடத்தி வரும் போர் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களுக்கு எங்கள் வீர மரியாதைகள்! சல்யூட்கள்!

நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். நீங்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும், இழப்புகளையும் கண்டு உங்களுக்காகக் குரல் எழுப்புவதைத் தவிர, பிரார்த்தனைகள் புரிவதைத் தவிர எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே!

இருப்பினும் உங்கள் பிரச்னைக்காகக் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம். அதனை எங்கள் நாடுகளின் அரசுகள் தடுத்தாலும் சரியே!

பலஸ்தீனர்கள் படும் துன்பங்கள் உங்கள் இதயங்களைப் பிழியவில்லையா? அவர்களின் கதறல்கள் உங்கள் செவிகளில் விழவில்லையா? வல்லாதிக்க நாடுகளுக்குப் பயந்து கொண்டும், வர்த்தக ஆதாயங்களைப் மனதில் கொண்டும் நீங்கள் மௌனம் காப்பது சரிதானா?

உங்களில் பலர் ஐ.நாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். சிலர் வாக்களிக்காமல் ஒதுங்கிச் செல்கின்றனர் தீமையைப் புரிவதும் தீமைகளின் போது மௌனமாக இருப்பதும் ஒருவகையில் ஒன்றுதான்!

ஆனால் சில நாட்டுத் தலைவர்கள் துணிந்து இஸ்ரேலைத் தட்டிக் கேட்கின்றனர். இராஜ்ஜிய உறவுகளைத் துண்டித்துக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு எமது நன்றிகள். மற்ற நாடுகளும் அதுபோன்று செய்யக் கூடாதா? இஸ்ரேல் மீது தடையைப் போடாதா?

ஓ! வல்லாதிக்க நாடுகளே!

எத்தனை காலத்திற்கு நீங்கள் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்குத் துணை நிற்கப் போகிறீர்கள்! தன்னைக் காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறும் உங்களால் ஃபலஸ்தீனர்கள் இழந்த, தங்களுடைய தாய் நாட்டைத் திரும்பிப் பெற உரிமை உண்டு என்று ஏன் சொல்ல முடியவில்லை?

உங்கள் நாட்டில் சில நூறு பேர்கள் கொல்லப்பட்டால் உங்கள் இரத்தம் கொதிக்கிறது. பழிவாங்க மனம் துடிக்கிறது. ஆனால் பிற நாட்டு மக்களை கொத்துக் கொத்தாய் கொல்கின்றீர்கள்.

மற்றவர்களால் கொல்லப்படும்போது அந்த அநியாயக்காரர்களை ஆதரிக்கின்றீர்கள். அல்லது கள்ள மௌனம் காக்கின்றீர்கள். உங்கள் உடலில் ஓடுவது மட்டும்தான் இரத்தமா? மற்றவர்கள் உடம்பில் ஓடுவது தண்ணீரா?

வல்லரசுகளாக இருக்கும் நீங்கள் நல்லரசுகளாக மாறுவது எப்போது? உங்களிடம் இருக்கும் செல்வம், அதிகாரம், ஆயுதம் உலக அமைதிக்குப் பயன்படட்டும்.

உங்கள் ஆயுதங்களை விற்பதற்கு போர்களை மூட்டி விடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

இஸ்ரேலின் கொடுமைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் ஒரு முடிவு கட்டுங்கள் உங்கள் வீட்டோ அதிகாரத்தை நன்மைக்குப் பயன்படுத்துங்கள்.நீங்கள் கடைப்பிடிக்கும் ஆளுக்கொரு நீதி என்ற இரட்டை நிலைப்பாட்டை கைவிடுங்கள்.

ஓ! ஐ.நா மன்றமே!

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகில் அமைதியை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. மன்றமே! நீங்கள் உலகில் எத்தனை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்? எத்தனை போர்களை நிறுத்தியுள்ளீர்கள்? எத்தனை கொடுமைகள், அநீதிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளீர்கள்?

வல்லோன் வகுத்ததே சட்டம் என்ற நிலைபாட்டிற்கு அல்லவா நீங்கள் ஆளாகிவிட்டீர்கள். ஐ.நா வல்லாதிக்க நாடுகளின் கைப்பாவையாக மாறிவிட்டது.

பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குப்பைத் தொட்டிக்குத் தள்ளப்படுகின்றன. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்ப்புகள் நிராகரிக்கப்படுகின்றன.

உனது தீர்மானத்தின்படி இஸ்ரேல் என்ற நாடு உருவாகியது. ஆனால் உன்  இன்னொரு தீர்மானத்தின்படி (242) இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியவில்லையே. ஆக்கிரமிப்பை நிறுத்த முடியவில்லையே!

ஒன்று ஐ.நா. சபையை ஜனநாயக மயமாக்குங்கள் அல்லது ஐ.நாவை சமூக சேவை நிறுவனமாக (NGO) ஆக்கிவிடுங்கள்.

ஓ! முஸ்லிம் நாடுகளின் தலைவர்களே!

நீங்கள் 55 நாடுகளுக்குத் தலைமை பொறுப்பில் உள்ளீர்கள். 200 கோடி முஸ்லிம்களில் பெரும்பான்மையே உங்கள் நாடுகளில்தான் வாழ்கின்றனர்.

இருந்தும் சின்னஞ் சிறிய நாடான இஸ்ரேலை வழிக்குக் கொண்டுவர உங்களால் முடியவில்லை.

இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கோழைத்தனம், சுயநலம், சுகபோகம் இவற்றிற்கு அளவே இல்லையா?

தென் அமெரிக்காவிலுள்ள சிறிய நாடுகளுக்கு இருக்கும் அக்கறையும், கவலையும் உங்களுக்கு இல்லையா?

உங்களின் மன்னராட்சி, எதேச்சதிகார ஆட்சிகளைத் தக்க வைப்பதில் தான் கவனமாக உள்ளீர்கள்.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உங்கள் நாட்டு மக்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் கூட நீங்கள் அனுமதிப்பதில்லை.

இறைத்தூதர் சொல்லியது எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது. ‘மனிதனை வழிகெடுப்பதில் வறுமையைவிட வளமையே முன்னணி வகிக்கின்றது’ என்ற கூற்றை உண்மைப்படுத்தி விட்டீர்களே!

சொந்தச் சகோதரர்களை ஆதரவின்றி தவிக்கவிடும் நிலைக்கு நீங்கள் தள்ளியுள்ளீர்கள். ஒருநாள் இதற்குச் சரியான விலை கொடுத்தே ஆக வேண்டும். மறுமையிலும் இறைத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

ஓ! முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்களே!

நீங்கள் நியாயத்தின் பக்கம் நிற்கின்றீர்கள். ஃபலஸ்தீனர்களை ஆதரிக்கின்றீர்கள். உங்களை ஆளுபவர்களோ ஒப்புக்காக ஃபலஸ்தீனர்களை ஆதரிக்கின்றனர். பின்புறவாசல் வழியாக இஸ்ரேலுடன் உறவு கொள்ளத் துடிக்கின்றனர்.

உலகில் எதேச்சதிகாரம், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மன்னராட்சி ஆகியவற்றை அகற்ற அந்தந்த நாட்டு மக்கள் பெரும் விலை கொடுத்துள்ளார்கள்.

போராட்டம் நிகழ்த்த எங்கள் நாட்டில் அனுமதி இல்லையே என்று சொல்லி தப்பிக்காதீர்கள்.

உங்கள் நாட்டு மன்னர்களுக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள். நீதிக்காகக் குரல் கொடுக்கும்படி நீங்கள் உங்களால் முடிந்தவரை குரல் எழுப்புங்கள். மௌனம் காக்காதீர்கள்.

ஓ! இஸ்ரேலிய ஆட்சியாளர்களே!

நீங்கள் இராணுவத்தில் வலிமை மிக்கவர்கள்! ஆயினும் விடுதலை தாகம் கொண்ட மக்களுக்கு முன் உங்களால் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியாது. எத்தனை ஆண்டுகளானாலும் அவர்கள் இழந்த தாயகத்தை மீட்டே தீருவார்கள்.

அவர்கள் கையில் கிடைக்கும் கற்களிலிருந்து ஏவுகணை வரை எதன் மூலமும் போராடுவார்கள். நீங்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. எந்த வல்லாதிக்க நாடும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வரவில்லையா? வியட்நாமில் சாதாரண மக்கள் அமெரிக்கப் படையை மண்ணைக் கவ்வச் செய்யவில்லையா? சத்தியம் ஒருநாள் வெல்லும் அதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக உங்களை நாடற்றவர்களாக அலைய விட்டவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள் அரபுக்கள் அல்லர்.

உங்களைக் கொடுமைப்படுத்திய ஐரோப்பியர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்தவர்கள் முஸ்லிம்களே! நீங்களோ அந்த அரபு மக்களுக்குத் துரோகம் செய்கிறீர்கள்.

4000 ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீனிலிருந்து ரோமானியர்களால் வெளியேற்றப்பட்ட நீங்கள் இப்போது அந்த நாடு எங்களுக்குச் சொந்தம் என்று சொல்வது எந்த நியாயத்தின் அடிப்படையில்? எந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்கின்றீர்கள்? யூதர்களிலேயே பலர் இவ்வாறு கேட்பது உங்கள் வேதமான தோராவிற்கு முரண்பாடானது என்று கூறுகின்றார்களே! இவை எல்லாம் உங்கள் செவிகளில் விழவில்லையா? ஐ.நா மன்றத்தின் தீர்மானங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றீர்கள். உலக நாடுகளின் கருத்துகளுக்கு நீங்கள் ஒருபோதும் மதிப்பளிப்பதில்லை.

உங்களிடமுள்ள வலிமையால் நீங்கள் வெற்றி பெறலாம். அது நிரந்தரமல்ல. ஆக்கிரமிப்புக்கு ஆளானவர்கள் ஒருபோதும் அடங்கிப் போக மாட்டார்கள்.

இறுதிவரை போராடுவார்கள். எனவே நீங்கள் நீதி, நியாயம், தர்மம், சர்வதேசச் சட்டங்கள் இவற்றின் அடிப்படையில் செயல்பட்டால் பிரச்னை சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் அமைதி பெறுவீர்கள். பலஸ்தீனர்கள் அமைதி பெறுவார்கள். மத்திய கிழக்கு உலகம் அமைதி பெறும்.

Dr. K.V.S ஹபீப் முஹம்மது

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...