ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று குஜராத்தின் காந்தி நகரில் இடம்பெற்றுவரும் ‘வைப்ரண்ட் குஜராத்’ உலக உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
காந்திநகரில் மகாத்மா மந்திர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
பொதுவாக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பொது இடங்களில் உரையாற்ற மாட்டார்.
ஆனால், இந்தியா மீதான அவரது அன்பும், பிரதமர் மோடியின் மீது கொண்ட மரியாதையும் அவரை குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் மேடையில் பேச வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வலுவான உறவுகளை இந்த உரை குறிக்கிறது.
உரையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடக தளமான X-ல் ஐக்கிய அரபு எமிரேட் அதிபரை பாராட்டினார்.
மேலும் தனது பதிவில் “எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உச்சிமாநாட்டை மேற்பார்வையிட்டது மட்டுமல்லாமல், உச்சிமாநாட்டிலும் பேசினார். அவரது உரை மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செவ்வாயன்று அகமதாபாத் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்ற பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை தனது சகோதரர் இந்தியாவில் இருப்பது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
Welcome to India my brother, HH @MohamedBinZayed. It’s an honour to have you visit us. pic.twitter.com/Oj7zslR5oq
— Narendra Modi (@narendramodi) January 9, 2024
பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் ஆகியோர் பின்னர் அகமதாபாத்தில் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சாலையில் பேரணியாக சென்றனர்.
அகமதாபாத்தில் பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபரை ஏராளமான மக்கள் வரவேற்றனர்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செவ்வாய்க்கிழமை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் UAE இன் முதலீட்டு அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதலீட்டு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு அமைச்சகம் புதுமையான சுகாதாரத் திட்டங்களில் முதலீட்டு ஒத்துழைப்புக்கான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2003ஆம் ஆண்டு மோடி மாநில முதல்வராக இருந்தபோது அவரது தலைமையில் வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு தொடங்கப்பட்டது.
வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின் 10-வது பதிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்த மாநாடு ஜனவரி 12 வரை காந்திநகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.