அமெரிக்காவின் நெவார்க் நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே பள்ளிவாசல் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூஜெர்ஸி மாநிலத்தில் முக்கிய நகரமாக விளங்குவது நெவார்க் நகரம். இங்கு இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். இங்கு அமைந்துள்ள மஸ்ஜித் முஹம்மத் என்ற மசூதியில் ஹஸன் ஷரீஃப் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இமாமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு மசூதியை விட்டு வெளியே வந்த ஹஸன் ஷரீஃப், தனது காரில் ஏறி அமர்ந்துள்ளார்.
பள்ளிவாசலுக்கு 10 அடி தூரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் இருந்த துப்பாக்கியால் காருக்குள் இருந்த ஹஸனை நோக்கி பலமுறை சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹஸன் ஷரீஃபை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பித்துச் சென்ற குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணம் முன்விரோதமா அல்லது இஸ்லாமிய வெறுப்பா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாம் ஹஸன் ஷரீஃப் நெவார்க் நகரத்தின் மிகப்பிரபலமான சகல மட்டங்களிலும் மதிக்கப்படுகின்ற ஓர் ஆளுமை. நெவார்க் விமான நிலையத்தில் சில காலங்கள் பாதுகாப்பு அதிகாரியாக கடமை புரிந்துள்ளார். இந்செய்தியை அறிந்த விமான நிலைய நிர்வாகம் இமாம் ஹசன் ஷரீஃபுடைய திடீர் மரணம் ஆழ்ந்த கவலை தருவதாகவும் அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளது.
ஒக்டோபர் 7ஆம் திகதி காசா யுத்தம் தொடங்கப்பட்டதையடுத்து தொடர்ந்து அமெரிக்க முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் செயற்பாடுகள் அதிகரித்து வந்துள்ளது. ஆனாலும் சம்பவம் நடந்த பிரதேசம் அத்தகைய சூழ்நிலை குறைவான பகுதி என்பதால் இச்சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரணகர்த்தாக்கள் யார் என்பதை விசாரணைகள் தான் தெரியப்படுத்தும் .
இக்கொலை பற்றி தகவல்களை தருவோருக்கு 25,000 டொலர்களை பரிசாக தருவதாக நெவோர்க் நகர பொலிஸார் அறிவித்துள்ளதன் மூலம் இப்படுகொலை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது புலனாகிறது.
வெறுப்பூட்டும் செயல்கள் அதிகரித்த சூழ்நிலையில் அல்பையூம் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டமையும் மூன்று பலஸ்தீனிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் செயல்கள் 162 வீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்கன் American islamic society குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை காசாவுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிப்பதால் அமெரிக்க முஸ்லிம்களுடைய ஆதரவு பாரியளவு சரிந்துள்ளதாகவும் இஸ்லாமோபியாவை கட்டுப்படுத்துவதற்கு தேசிய அளவிலான மூலோபாயத்திட்டத்தை வகுக்க இருப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.