அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: மக்களிடையே மேலும் பகைமையையே வளர்க்குமா- சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Date:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை  நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.

பல சர்வதேச பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களும் இந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வட இந்தியாவில் உள்ள அயோத்தியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“திங்கட்கிழமை நடைபெற இருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவின் மூலம், இந்து தேசியவாதிகளின் கோரிக்கை நிறைவேறும் என்றும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது” என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கும் அளவிற்கான தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய விருந்தினர்கள் இந்த நிகழ்விற்கு வருவதற்காக டஜன்கணக்கான விமானங்கள் அயோத்திக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

“இந்தியாவில் உள்ள மிகவும் சர்ச்சைக்குரிய மத ஸ்தலங்களில் ஒன்றான ராமர் கோவில் திறப்பு விழா மூலம் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன், நரேந்திர மோடியின் அரசியலுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும்” என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

“அவர் மூன்றாவது முறையாக அதிகாரத்திற்கு வர முயற்சி செய்கிறார். அதற்காக அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் இருக்கும் இந்துக்களை கவர முயற்சித்து வருகின்றனர்” என்கிறது அந்த பத்திரிகை செய்தி.

இந்த விழாவில் 7,500 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில், தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்து அடிப்படைவாதிகளால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மசூதி தகர்க்கப்பட்ட அதே அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க உள்ளார்’ என செய்தி வெளியிட்டுள்ளது தி பைனான்சியல் டைம்ஸ்.

“இதை செய்வதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். அதில் இந்து தேசியவாதம் முக்கியமான பங்கு வகிக்கும்” என்று அப்பத்திரிகை எழுதியுள்ளது.

மேலும் கோவிலின் கட்டுமான பணிகளை முடிப்பதற்காக 4,500 பணியாளர்கள் இரவும் பகலுமாக பணியாற்றி வருவதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்தியாவில் இந்திராகாந்திக்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவர் என்ற பெயரை நரேந்திர மோடிக்கு பெற்று தரும் மற்றும் இது அவருக்கு வலுவான மற்றும் நீடித்த பாரம்பரியத்தை பெற்று தரும் என்று நிபுணர்கள் கூறுவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியால் உருவாக்கப்பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அலை மூலமாகவே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துள்ளார் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி குறித்து நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய புத்தகத்தில், அயோத்தியை இந்துத்துவாவின் வாடிகனாக மாற்ற மோதி விரும்புவதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வரலாற்றில் ஒரு முக்கியமான நபராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு எப்போதும் உண்டு என்றும், எதிர்காலத்தில் மற்ற தேசிய தலைவர்களை போலவே தானும் மரியாதையுடன் பேசப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார் என அவர் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்றுவரும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தி எக்கனாமிஸ்ட் இதழ், இந்துத்துவாவை அடிப்படையாக கொண்டு ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்க பாஜக விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.

“இந்துத்துவா மற்றும் இந்துயிசம் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளதாக பாஜக கூறி வருகிறது. எனவே, அயோத்தியில் நடப்பவை எதுவாகினும் அது பாஜகவின் தேர்தல் முழக்கங்களுக்கும் அப்பாற்பட்டவை. இருப்பினும், இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமற்ற முறையில் பாஜகவின் தேர்தல் பிரசாரமாகவே இருக்கும்” என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.

அந்த இதழில் ,“இந்த தினத்தில் தீபாவளி கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோதி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், 80 சதவீத இந்துக்களில் பலரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வெற்றியல்ல என்றே நம்புகின்றனர். அவர்களில் 14 சதவீத இஸ்லாமியர்களும் அடங்குவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பிரதமர் மோதியை புகழ்வதற்காக இந்த நிகழ்வில் பல பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பெரிய இந்து துறவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்பார்கள்”

“அயோத்தியில் கோவில் கட்டுவது மக்களிடையே மேலும் பகைமையையே வளர்க்கும் என்று நரேந்திர மோதியின் எதிராளிகள் தெரிவிக்கின்றனர். இது நரேந்திர மோதியின் தவறான எண்ணத்தின் அடையாளம் என்று அவர்கள் கூறுகின்றனர்”

“இந்த கோவில் பிரச்சாரத்தின் மூலம் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து விட்டால், இந்தியா சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்ட நாடாக மாறி விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்”

ஆனால் அயோத்தி வெறும் பாஜக பெருமை கொள்ளக்கூடிய திட்டம் மட்டுமல்ல. இந்த திட்டத்தின் மூலம் அயோத்தியை சுற்றி 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றுலா தளங்களின் மையமாக மாற்றுவதற்கான பிரச்சாரம் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

அந்த இதழில், நரேந்திர மோதி ஒன்றும் திடீரென்று பிரபலமாகி விடவில்லை. தெளிவாக உருவாக்கப்பட்ட உத்தியின் மூலம், அவர் மீது நேர்மறையான ஊடக வெளிச்சம் விழுவதை பாஜக உறுதி செய்தது. கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 82 சதவீத ஊடகங்கள் தங்களது ஊழியர்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த இதழ், எதிர்க்கட்சிகள் பண மதிப்பிழப்பு, விவசாய சட்டங்கள் திரும்பப் பெற்றது உள்ளிட்ட மோடியின் தோல்விகளை உரக்கப் பேசி வருவதாகவும் எழுதியுள்ளது.

விவசாயிகளின் ஊதியத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி உறுதியளித்திருந்தார். இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் அவர் உறுதி கொடுத்திருந்தார். ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

  • நன்றி: பிபிசி தமிழ்

Popular

More like this
Related

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல்...

நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...