பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் வெல்வரா? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் ஷகீப் அல்ஹாசன். ஆல்ரவுண்டரான இவர் தனது சுழற்பந்துவீச்சில் எதிரணியை திணறடித்து வந்தார்.
உலககோப்பை தோல்விக்கு பிறகு ஷகிப் அல் ஹாசன் அரசியலில் நுழைந்தார். கிரிக்கெட்டில் இருந்து அவர் இன்னும் ஓய்வை அறிவிக்காத நிலையில் முன்னாள் கேப்டன் மோர்தாசா பாணியில் கிரிக்கெட்டில் இருந்து கொண்டே அரசியலில் நுழைந்தார். அதன்படி ஷகிப் அல் ஹாசன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் இணைந்தார்.
ஷகிப் அல் ஹசனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அதன்படி ஷகிப் அல் ஹசன் தனது சொந்த தொகுதியான மகுராவில் களமிறங்கி உள்ளார்.
தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் Boat சின்னத்தில் களமிறங்கி உள்ளார். மகுரா தொகுதியில் வெற்றி பெற ஷகிப் அல் ஹசன் தீவிர பிரசாரம் செய்து வந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது.
இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடந்து முடிந்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் இன்று வாக்ளித்தனர்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் 27 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 436 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். இதில் ஒருவர் தான் ஷகிப் அல் ஹசன்.
ஷகிப் அல் ஹசனுக்கு மகுரா தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இன்றைய ஓட்டுப்பதிவிலும் அவருக்கு அதிகமானவர்கள வாக்களித்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதனால் ஷகிப் அல் ஹசன் வென்று எம்பியாவது உறுதி என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்னர்.
மேலும் தற்போதைய சூழலில் இன்று நடைபெற்ற ஓட்டுப்பதிவின் அடிப்படையில் பார்த்தால் ஷகிப் அல் ஹசன் அங்கம் வகிக்கும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி தான் மீண்டும் வெற்றி பெறும் எனவும், ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமர் ஆவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.