இந்தியாவில் அயோத்தி நகரத்தில்ராமர் சிலை திறக்கப்பட்ட தினத்தில், தமிழ்நாடு சிவகங்கை இளையான்குடியில் நடந்த சம்பவம், தமிழக மக்களை புல்லரிக்க வைத்து வருகிறது.. அப்படி என்ன நடந்தது?
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவனம் முதுவந்திடல் கிராமமாக இருந்தாலும் சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ரம்ழான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம்.
அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்.
அந்தவகையில், மதநல்லிணக்க உணர்வுகள் தமிழக மக்களிடம் தென்பட்டு வருகின்றன.
அவ்வளவு ஏன்? சமீபத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பின்போதுகூட, சென்னை பூந்தமல்லி மசூதியின் அறிவிப்பு பலரையும் நெகிழ வைத்திருந்தது.. “அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல” ” என்ற இந்த அறிவிப்பானது, காண்போரை நெகிழ வைத்தது.
தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுமே, மசூதிக்குள் திரண்டனர்… அவர்களுக்கு வயிறார உணவு தரப்பட்டது..
இப்போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் திறப்பு விழா கடந்த 21ம் திகதி நடைபெற்றது.
இந்த விழாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அந்த கிராமத்தை சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே பங்கேற்றனர்.
ஊர் முழுவதுமுள்ள வீதிகளிலும், தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும், இந்த விழாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து வந்தார்கள்..
மற்றொருபுறம் கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டு சென்றார்கள்.. பிறகு, 150 கிடாக்கள் வெட்டப்பட்டன.
மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.. மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடந்த இந்த விழா காண்போரை சிலிர்க்க வைத்தது.
இதுமட்டுமல்ல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை போய்க் கொண்டிருந்தார்கள், அப்போது, பழனி பக்தர்களுக்கு பள்ளபட்டி இஸ்லாமியர்கள் வாட்டர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் பாக்கெட், கால் வலிக்கான ஆயின்மென்ட், செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி, மினரல் வாட்டர் இவ்வளவையும் தந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவங்கள் எல்லாமே மனித மனங்களை நெகிழ செய்து வருகிறது. மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், ஒவ்வொருமுறையும் இயற்கை சீற்றங்கள், நமக்கு உணர்த்திவிட்டு செல்கின்றன..
மதநல்லிணக்கம் எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் உள்ளமும், இங்கிருக்கும்வரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த “சகோதர உறவுகள்” நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன… தழைத்தோங்கட்டும் மனித நேயம்.