18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், இன்னும் ரூ.50,000 அபராதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் ரூ.50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.
ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி இலக்கம் பெறுவது கட்டாயமானாலும், அதனை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.50000 அபராதம் விதிக்க சட்ட ஏற்பாடு இருந்தாலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.
வரிக் கோப்பினைத் திறந்து இலக்கத்தைப் பெறுவது கட்டாயம். ஆனாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதில்லை என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், தற்போது மாதத்திற்கு 100,000 ரூபாய் நிகர வரி வருமானம் உள்ளவர்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.