புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், 2024 பெப்ரவரி 01 முதல் வரி அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரி அடையாள எண் ஒருவரை வருமான வரிக்கு தானாக பொறுப்பாக்காது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆண்டு வருமானம் 1.2 மில்லியன் ரூபாவாக உள்ள 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் மாத்திரம் இந்த புதிய வரியை செலுத்த வேண்டிய கடமை எழுகிறது.
பெப்ரவரி 01 முதல் நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது TINஐச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
வரி அடையாள இலக்கம் (TIN) என்பது நாடெங்கிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தவறான விடயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
TIN இலக்கத்தைக் கொண்டிருப்பது என்பது சுயமாகவே வரிக் கொடுப்பனவை மேற்கொள்ளும் பொறுப்பிற்கு வழிவகுக்காது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அத்தியாவசியம்.
அதற்கு மாறாக, எவ்விதமான சிக்கல்களுமின்றி பல்வேறு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இது மக்களுக்கு வழங்குகின்றது.