இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
விபத்து தொடர்பாக சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாகன சாரதியான பிரபாத் எரங்க பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். “முடிந்தளவு தாமதமின்றி கொழும்பு வருவதற்கு நினைத்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன்.
நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, முன்னால் இருந்த கண்டெய்னர் மீது மோதியது. பின்னர் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.