குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவுடன் தொடர்பில் இருந்த 19 பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென் மாகாணத்தில் உள்ள பல்வேறு பதவி நிலைகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டா தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்தே இவ்வாறு விசாரணைகளுக்கு பணிப்புரை விக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டா வெளிநாட்டில் இருந்தபோதும், கைது செய்யப்பட்ட பின்னரும் அவர் தலைமையிலான போதைப்பொருள் வலையமைப்புடன் பொலிஸ் அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிடியாணை சலுகைகளை வழங்க தொடர்பு கொண்டிருந்தார்களா? மற்றும் அவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட சலுகைகளை வழங்கினார்களா? என்ற கோணத்தில் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பெற்ற இலஞ்சப் பணத்தில் வேறு நபர்களின் பெயரில் வாங்கப்பட்ட சொத்து, வாகனங்கள் போன்ற சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.