பலஸ்தீனத்தை விடுவிக்கக்கோரி அமெரிக்கா வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் பலியாகியுள்ளனர்.
ராணுவ சீருடை அணிந்தவாறு இனப்படுகொலைக்கு இனியும் ஆதரவாக இருக்க மாட்டேன் எனக்கூறி தனக்குத் தானே அவர் தீவைத்துக் கொண்டார்.
தீப்பற்றி எரிந்தபோதும், பலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என பலமுறை கூறிய அவர், சரிந்து விழுந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர நிகழ்வு ட்விட்ச் என்ற சமூக ஊடகத்தில் நேரலையாகி, அமெரிக்காவுக்கு அப்பாலும் மக்களை பதற வைத்தது. உடனடியாக அந்த வீடியோவை ட்விட்ச் நிர்வாகம் நீக்கியது. ஆனபோதும், அமெரிக்கா ஆசிர்வாதத்தில் நடைபெறும் ஒரு போர் நடவடிக்கைக்கு எதிரான அமெரிக்கர்களின் குரலை வெளியுலகுக்கு எதிரொலிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது