நல்லிணக்கத்துடன் வாழ்ந்த இந்நாட்டு மக்களிடையே இன, மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பேராசை பிடித்த அரசியல்வாதிகளே பிரதான காரணம் என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமையை உருவாக்க பல விடயங்களைச் செய்யும் போது, இந்த அரசியல்வாதிகள் அவற்றை அழிப்பதோடு, ஒற்றுமையையும் அழிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
நல்லிணக்கத்துடன் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன, மத முரண்பாடுகளை உருவாக்குவதற்கு பேராசை பிடித்த அரசியல்வாதிகள் முனைப்பு காட்டுகின்றனர். தேர்தல் நெருங்கும்போதுதான் அரசியல்வாதிகளுக்கு தேசம் நினைவுக்கு வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர், இவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
“இந்த தேசிய ஒருமைப்பாடு, மத ஐக்கியம், வடக்கின் பிரச்சினை மற்றும் ஏனைய தேசிய பிரச்சினைகளுக்கு விடை காண எத்தனை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதில் ஏதாவது வேலை செய்ததா? வெறும் பணம் செலவழித்தது.
நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்குவது அரசியல்வாதிகள்தான்.
முஸ்லிம், சிங்கள, தமிழ் பாடசாலைகளை கட்டி சிறு வயதிலிருந்தே இன, மத வேறுபாடுகளை உருவாக்கினார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக இவை செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழப்பங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் எத்தனை சிங்கள மக்கள் இருந்தார்கள்? சிங்களவர்கள் வியாபாரம் செய்தார்கள்.
சிங்களப் பாடசாலைகள் இருந்தன. அந்த வர்த்தகர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அரசியல்வாதிகள்அதற்கு தடை விதித்துள்ளனர்.
பண்டைய மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகின்றன. அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் இருக்க முடியும்? இவை அனைத்தும் பொய்யான செயல்கள். தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றும் செயல்கள் என்று நினைக்கிறோம்.