இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை மஜாலிஸுல் உலமாவின் தலைவர் கண்ணியத்துக்குரிய உஸ்தாத் ஷைகுன் நஜாஹ் உஸ்தாதுஸ் zஸமான் நஜ்முல் உலமா A.L. முஹாஜிரீன் நத்வி ஸுபி அல் காதிரி அவர்கள் இந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆலிம்களை உருவாக்கியவர் என்பதோடு இலட்சக்கணக்கான அஹ்லுஸ் ஸுன்னத்து வல் ஜமாஅத்தினருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என இஸ்லாமிய ஐக்கியப் பேரவை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவை உருவாக்கப்பட்டதில் இருந்தே அதன் அங்கத்துவத்தைப் பெற்றுள்ள அகில இலங்கை மஜாலிஸுல் உலமா முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அன்னாருடைய இழப்பு பேரிழப்பாகும் என இஸ்லாமிய ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளது.
உஸ்தாத் முஹாஜிரீன் நத்வி ஸுபி அல் காதிரி அவர்களது இழப்பினால் துயருருகின்ற அகில இலங்கை மஜாலிஸுல் உலமாவின் அங்கத்தவர்கள், அவரிடம் கற்ற மாணவர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் ஆறுதலைத் தர வேண்டும் எனவும், அல்லாஹுத்தஆலா அவரது பணிகளைப் பொருந்திக் கொண்டு அவனது மேலான ஜன்னதுல் பிர்தௌஸை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் கண்மணி நபிகள் நாயகம் முஹம்மதுர் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஷபாஅத்து அவருக்குக் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திப்பதாகவும் ஸ்தாபகர்கள் மற்றும் அங்கத்துவ அமைப்புக்கள் சார்பில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் (25) காலமான உஸ்தாத் முஹாஜிரீன் நத்வி ஸுபி அல் காதிரி அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று மாத்தளை ரைத்தலாவலை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.