அயோத்தி கோயில் விவகாரம்: தினமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமும் பதில்களும்

Date:

குறிப்பு: தமிழ்நாட்டின் பிரபல சஞ்சிகையான ‘சமரசம்’ இதழில் வெளியாகியுள்ள பயனுள்ள இந்த ஆக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இராமர் கோயில் திறக்கப்பட்ட போது இந்துத்துவ அமைப்புகள் அதனை வெற்றிக் கொண்டாடமாக்கிக் கொண்டிந்த போது முஸ்லிம்கள் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களின் வாயிலாக வெளிக்காட்டினர்.

இந்துத்துவ மனநிலை கொண்ட பலர் அதனை ஆதரித்து தங்களது பதிவை வெளியிட்டனர்.

இச்சூழலில் தினமணி நாளிதழில் 22.1.24, 23.1.24 தேதிகளில் வெளியான இரண்டு தலையங்கங்களிலும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உண்மைக்குப் புறம்பான, அவதூறான பல கருத்துகளை எழுதியிருக்கின்றார்.

அந்தக் கருத்துகளுக்குத் தக்க பதில் கொடுத்தாலே பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆலயமல்ல – அடையாளம் 22.01.24 தினமணி தலையங்கம்

தினமணி: மத உணர்வுகளை மீறிய பாரதப் பெரும் பரப்பில் பிறந்த ஒவ்வொருவரின் தன்மான மீட்பாக இதனைப் பார்க்க வேண்டும்.

பதில்: ஒரு ஆலயம் நாட்டின் அடையாளமாக இருக்க முடியாது. இந்துக்களின் அடையாளமாகவும், தன்மான மீட்பாகவும் இதனைக் கருத முடியாது. இந்துத்துவ சக்திகளுக்கு வேண்டுமானால் இது அடையாளமாக இருக்கலாம். நாட்டு மக்களுக்கு அல்ல.

இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு விழுந்த பலத்த அடியாகவே இதனைக் கருத வேண்டும்.

தினமணி: பாபரி மஸ்ஜித் இடிப்பால் சிறுபான்மை முஸ்லிம்களின் மத உணர்வு புண்பட்டது என்று கூறும் மதச்சார்பின்மைவாதிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். கி.பி 1528இல் முதலாவது மொகலாய மன்னர் பாபரின் தளபதி மீர்பாகியால் அங்கிருந்த இராமர் கோவில் இடிக்கப்பட்ட போது எந்த அளவுக்குப் பெரும்பான்மையான இந்துக்களின் மனம் புண்பட்டிருக்கும்? தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் உள்புறமிருந்த கோயிலின் தூண்களும், அகழ்வாராய்சியில் கிடைத்த பொருள்களும், அங்கு இராமர் கோயில் இருந்ததை உறுதிப் படுத்தியிருக்கின்றன. 1510இல் அயோத்திக்கு விஜயம் செய்த சீக்கிய ஸ்தாபகர் குருநானக் தேவ் அங்கிருந்த இராமர் கோயிலை வழிபட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

பதில்: கி.பி 1528இல் தளபதி மீர்பாகியால், இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் இருந்தால் தினமணி ஆசிரியர் அதனை உடனே வெளியிட வேண்டும். கி.பி 1510இல் குருநானக் இராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை வரலாறு பதிவு செய்திருந்தால், 1528இல் மீர்பாகியால் இராமர் கோயில் இடிக்கப்பட்டதையும் வரலாறு நிச்சயம் பதிவு செய்திருக்கும். ஆனால் அப்படி எந்தப் பதிவும் இல்லை.

அயோத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட இராமர் கோயில்கள் அப்போது இருந்தன. அதில் ஏதாவது ஒன்றுக்கு குருநானக் சென்றிருக்கக் கூடும். ஏற்கனவே இருந்த கோயிலை இடித்துத்தான் அதன் மீது பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை என உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாகச் சொன்ன பிறகு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஏன் ஆதாரமில்லாமல் அதே வாதத்தை மீண்டும் முன்வைக்கிறார்? குறைந்தபட்சம் அவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டுத் தனது கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

தினமணி: இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களிலும் இராமருக்குக் கோயில் இருக்கும் போது அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் ஏன் கோயில் கட்ட வேண்டும் என்ற கேள்வியும் அர்த்தமற்றது. இராமர் பிறந்த இடம் என புராணங்கள் காட்டும் அயோத்தி நகரில் தங்களது இஷ்ட தெய்வமான ஸ்ரீராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நினைப்பதில் என்ன தவறு? ஜெரு சலத்திற்காக ஏன் கிறித்தவர்கள் போராடுகிறார்கள்? அதே காரணம் அயோத்திக்கும் பொருந்தும்.

பதில்: தினமணி ஆசிரியர் கூறுவது போல் இராமருக்கு எல்லா ஊர்களிலும் கோயில் இல்லை. தமிழ்நாட்டின் எந்த ஒரு ஊரிலும் பெரிய இராமர் கோயில் எதுவுமில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான். சிவன், முருகன், விநாயகர், கிருஷ்ணன், பெருமாள், காளி ஆகியவர்களுக்கே இந்தியா முழுவதும் கோயில்கள் உள்ளன. இன்னமும் இந்தியாவில் இராமர் வழிபாடு பிரபலமாகவில்லை. ஜெருசலத்திற்காகக் கிறித்தவர்கள் போராடவில்லை. யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கும், ஃபலஸ்தீன மக்களுக்கும் தான் ஜெருசலம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இருக்கிறது. மேலும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போல, ஜெருசலத்தில் வழிபாட்டுத் தலங்கள் எதுவும் இடிக்கப்படவில்லை.

தினமணி: எந்த ஓர் இனமும் எந்த ஒரு தேசமும் படையெடுப்பாளர்களால் தனது வரலாற்றுக்கும் கலாச்சாரத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் தேடுவதையும், இழந்த சுதந்திரத்தையும் தன்மானத்தையும் மீட்டெடுப்பதையும் அடிப்படை உணர்வாகப் பார்க்க வேண்டும். அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் எழுப்பப்படுவதை அந்தக் கோணத்தில் தான் பார்க்க வேண்டும்.

பதில்: இராமர் கோயில் படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் எதுவுமில்லை. எனவே சுதந்திரம் தன்மான மீட்டெடுப்பு என்று கூறுவதில் பொருள் எதுவும் இல்லை.

தினமணி: அயோத்தியிலும், அதை அடுத்த பைஸாபாத்திலும் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு அதில் எதிர்ப்பு இருக்கவில்லை. வெளியிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களும், சிறுபான்மை வாக்கு வங்கியைக் குறிவைக்கும் மதச் சார்பின்மைவாதிகளும் தலையிட்டதால் பிரச்சினை. தேவையில்லாமல் இந்துத்துவா எதிர்வினையாக மாறி இன்று ஒட்டுமொத்த இந்திய சமூகமும் மதரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.

பதில்: அயோத்தியிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள் கோயில் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தினமணி வைத்தியநாதன் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அந்தப் பகுதி முஸ்லிம் தலைவர்கள்தான் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை நடத்தினார்கள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த விஷயத்தில் வெளியிலுள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அளித்த ஆதரவு தார்மிகமானதே. பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் இராமர் கோயில் கட்ட வெளிப்படையாக, அதே நேரத்தில் வெறித்தனமான முறையில் இயக்கங்கள் நடத்தியதையும், கரசேவை என்ற பெயரில் அயோத்தியில் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாபரி மஸ்ஜித்தை இடித்ததையும் தினமணி ஆசிரியர் ஏன் மறைக்க முனைகிறார்? வெளியிலுள்ள இந்துத்துவ அமைப்புகள் இந்தப் பிரச்னையில் தலையிடலாம், ஆனால் முஸ்லிம் தலைவர்கள் தார்மிக ஆதரவு கூட அளிக்கக் கூடாது என்பது எந்த ஊர் நியாயம்? இந்தியாவில் முஸ்லிம்கள் 14 விழுக்காடு உள்ளனர். 14 விழுக்காடு முஸ்லிம்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு என்ன வாக்கு வங்கி அரசியல் நடத்த முடியும்? எதிர்க்கட்சிகளுக்கு 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள இந்து மக்களின் வாக்குகள் தேவையில்லையா? உண்மையில் இந்து வாக்கு வங்கி அரசியல் நடத்துவது பாஜகவே.

தினமணி: நடந்து போன நிகழ்வுகளை அசை போடுவதில் எந்த லாபமும் இல்லை. முஸ்லிம்களுக்கு மக்கா, மதீனா, கிறித்தவர்களுக்கு ஜெருசலம் என்பது போல் இந்துக்களுக்கு காசி, இராமேஸ்வரம், அயோத்தி, சோமநாத் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பதில்: இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக அயோத்தியை ஏற்றுக் கொள்வதில் முஸ்லிம்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்டுவதையும் முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பாபரி மஸ்ஜிதை இடித்து விட்டு, கோயில் கட்டுவதைத்தான் எதிர்த்தார்கள். அதுவும் சட்ட ரீதியாகவே! உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

தினமணி: நீதிமன்றத் தீர்ப்பும், 2019 தேர்தல் வெற்றி மூலம் கிடைத்த அங்கீகாரமும் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட உதவியுள்ளன. இந்த ஆண்டு அயோத்தியில் தாஜ்மஹாலை விடவும் மிகப் பிரம்மாண்டமான மசூதி கட்டப்படவிருக்கிறது. அயோத்தி பாபரி மஸ்ஜித் வழக்கின் வாதியான இக்பால் அன்சாரியே நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். எனவே இதனை ஒரு தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும்.

பதில்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை. 1858ஆம் ஆண்டே மஸ்ஜிதின் பின்புற வராந்தாவில் குழந்தை இராமர் சிலை வைக்கப்பட்டு அது இந்துக்களால் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாகவும், 1858க்கு முன்னர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை புரிந்தனர்.

என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், 1949க்குப் பிறகு முஸ்லிம்கள் அதில் தொழுகை புரியவில்லையென்றும் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் முஸ்லிம்கள் தொழுகை புரிந்த இடத்தில் இராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பின்னர் மஸ்ஜித் பூட்டப்பட்டது. எனவே முஸ்லிம்கள் தொழுகை புரிய முடியவில்லை.

எனவே பிரச்னைக்குரிய மஸ்ஜித் அதிககாலம் இந்துக்கள் வசமே இருந்து வருகிறது என்றும், அதன் அடிப்படையில் மஸ்ஜித் இருந்த 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு வழங்கப்படுவதாகவும், முஸ்லிம்கள் மஸ்ஜித் கட்டிக் கொள்ள அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமென்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர். இந்த விநோதமான தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டனர். இந்தத் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அரசு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியது.

இன்னொரு நீதிபதியான அப்துல் நசீரின் பதவிக் காலம் முடிந்த பிறகு அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாட்டு மக்கள் அறிந்தே உள்ளனர்.

அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான மஸ்ஜித் கட்டப்படுவதில் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி ஏதும் இல்லை. பாபரி மஸ்ஜித் அநியாயமாகப் பறிக்கப்பட்டு விட்டதே என்ற ஆதங்கமே இருக்கிறது. கோயில் திறப்பு விழாவை மோடியே முன்னின்று ஆர்எஸ்எஸ், பாஜக விழாவாக நடத்தி முடித்து விட்டார். பின் அது எப்படி தேசிய விழாவாக இருக்க முடியும்?

தினமணி: அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்ட பிரதமர் மோடியைக் காலம் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஸ்ரீராமரே அவரைத் தன் பக்தராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானியின் கருத்தை வழிமொழியத் தோன்றுகிறது.

பதில்: இராமர் கோயில் கட்டுவதற்காக 1990ஆம் ஆண்டு நாடெங்கும் ரத யாத்திரை நடத்திய, 6.12.1992 அன்று கர சேவகர்களால் பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட போது அதனைக் கண்டுகளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அத்வானியை ஏன் பகவான் தேர்ந்தெடுக்கவில்லை? ஒருவேளை அத்வானியின் சேவைகளை ஸ்ரீராமர் ஏற்றுக் கொள்ளவில்லையோ? அதனால் தான் அவருக்குப் பிரதமர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ கிடைக்கவில்லையோ? அந்தோ பரிதாபம்!

ஜனவரி 24ஆம் நாள் மலரட்டும் இராமராஜ்யம் எனும் தலைப்பில் இதை விடவும் மிக மோசமான அவதூறுகளையும் வெறுப்பையும் தினமணி தலையங்கம் வெளிப்படுத்தியிருந்தது. அதற்கான நமது பதில்கள் அடுத்த இதழில் இடம் பெறும்.

சேயன் இப்ராகிம்

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...