இலங்கை சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டம், புரட்சிகரமான முன்னேற்றமாகும்: யுனிசெப்

Date:

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இலங்கை சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமானதொரு முன்னெடுப்பாகும்.

1939 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சிறுவர்களுடன் தொடர்புடைய நீதியை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டவாக்கமாக இருந்து வருகின்ற இக்கட்டளைச்சட்டமானது
ஏற்கனவே 16 வயதிற்குப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தியதுடன் தற்போது இந்தத் திருத்தத்தினூடாக அந்த வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப் பருவத்தினர் மீது பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது பாதுகாவலர்கள் பிரயோகிக்கும் உடல் ரீதியான தண்டனைகளை நியாயப்படுத்தி அவர்களுக்கெதிரான சட்ட ஏற்பாடுகளுக்கு இடங்கொடுக்காத குறித்த கட்டளைச் சட்டத்தின் ஒரு உறுப்புரை அல்லது ஒரு பகுதி இத்திருத்தத்தினால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இலங்கைச் சட்டங்களை சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வசே தரநியமங்களுடன், குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்துடன் சீரமைப்பதற்கு இத்திருத்தங்கள் பங்களிப்புச் செய்வது மாத்திரமன்றி, நாட்டில் சிறுவர்கள் மற்றும் கட்டடிளமைப் பருவத்தினரின் தேவைகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வுகளை வழங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை நாட்டுப் பிரதிநிதி, கிறிஸ்டியன் ஸ்கூக் கூறுகையில்,

‘சிறுவர் உரிமைகள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் இலங்கையின் சிறுவர் உரிமைகளுக்கான ஒரு மைல் கல்லாக இருப்பதுடன், அது ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்தும் நீதி முறைமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும், இலங்கையில் சகல சிறுவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பாடசாலை மற்றும் வீடு உள்ளடங்கலாக அனைத்து மட்டங்களிலும் சிறுவர்களுக்கெதிரான உடல் ரீதியான தண்டனையை முற்றாக தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பது இந்தத் திருத்தத்தின் புரட்சிகரமான முன்னேற்றமாகும்’ என்று குறிப்பிட்டார்.

இத்திருத்தங்கள் சட்டத்திற்கு முரண்படும் சிறுவர்களை கையாளும் நடவடிக்கைகளில் புரட்சிகமானதொரு நகர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், இத்திருத்தங்களுக்கு முன்பு குற்றமிழைத்த 16 – 18 வயது சிறுவர்கள் வயது வந்தோரின் சிறைக்கூடங்களிலேயே வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வுத் திட்டங்களோ அல்லது பராமரிப்பு நடவடிக்கைகளோ இருக்கவில்லை.

என்றாலும், தற்போது அமுலுக்கு வந்திருக்கும் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்களின் விளைவாக இத்தகைய சிறுவர்கள் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களங்களின் மேற்பார்வையின் கீழ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் இங்கு ஒழுக்காற்று அணுகுமுறையை விட புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.

ஒரு பிள்ளையை தடுப்புக் காவலில் வைப்பது இறுதி முயற்சியாக இருக்க வேண்டுமென்றும் அது மிகவும் குறுகிய காலத்திற்கு மாத்திரம் இருக்க வேண்டுமென்றும் சிறுவர் உரிமைகளுக்கான சமவாயம் வலியுறுத்துகின்றது.

ஏனெனில், நிறுவனமயமாக்கல் பிள்ளையின் அபிவிருத்திக்கும் மீள் ஒருங்கிணைப்பதற்கும் தடையாக இருந்து வன்முறை மற்றும் வறுமைக்கு இட்டுச்செல்லும் என்றும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, இளம்பருவக் குற்றவாளிகளுக்கு தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்குப் பதிலாக மிகவும் வினைத்திறனுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான குடும்ப-மைய புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமைப்படுத்துமாறு யுனிசெப் நிறுவனம் நீதித்துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறைகளில் பணியாற்றும் கரிசனையாளர்களை வேண்டிக்கொள்கின்றது.

யுனிசெப் நீண்டகாலமாக உலகளாவிய சிறுவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் இலங்கையின் இத்திருத்தங்களிலும் அதன் ஆதரவு ஆழமாக வேரூன்றியுள்ளது.

அந்த வகையில், சிறுவர்களுக்கான இலங்கையின் நீதித்துறை பற்றி யுனிசெப் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு நடாத்திய ஒரு ஆய்வில் முக்கியமான தரவு இடைவெளிகளை அடையாளப்படுத்தியதுடன் சிறுவர்களுக்கான நீதித்துறைப் பாதுகாப்பின் பொருத்தப்பாடு மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தத்தில் இந்தப் பரிந்துரைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பிள்ளையின் நலனை முன்னுரிமைப்படுத்தும் விதத்தில் நீதித்துறையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடப்பாடுகளை பூர்த்திசெய்வதையும் நாட்டின் இளவயதினரின் நலன்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகின்றது.

யுனிசெப் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் நீதி அமைச்சு மற்றும் ஏனைய பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து, அனைவரும் நீதித்துறையை அணுகுவதற்கான வாய்ப்புக்களை வலுப்படுத்துவதோடு நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் வகைகூறலை மேம்படுத்துவதோடு தரமான, வினைத்திறன்மிக்க சேவை வழங்கலையும் உறுதிப்படுத்துகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...