இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கென யாப்பு வரையும் பணிகள் ஆரம்பம்!

Date:

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 31 இல் மாளிகாவத்தை ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
தஃவதே இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த அல்-ஹாஜ் அல்-ஆலிம் தாஜுல் முனீர் அத்தாரி-காதிரி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஷ்-ஷேய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி), இலங்கையில் எமக்குள்ள நிஃமத்துகளை ஒன்றாயிணைந்து பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.
இம்முறை நடைபெற்ற சந்திப்பில் முஸ்லிம் சமூகம் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான பல விடயங்கள் பேசப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அஸ்ஸுன்னா ட்ரஸ்டின் தலைவர் அல்-ஹாஜ் அல்-ஆலிம் இஹ்ஸான் இக்பால் காதிரி அவர்கள், அல் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பின்பற்றி வருபவற்றை பிழை என்று கூறுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. நல்லடியார்களைப் பின்பற்றுவது கூடாது என்னும் போது குழப்பம் உண்டாகிறது. இதற்குப் பதிலளிக்க வேண்டிவரும் போது தான் பிரச்சினைகள் உண்டாகின்றன.

ஒவ்வொரு தரப்பும் அவர்களது கொள்கைகளைப் பேணி, அடுத்தவர்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் சமூகத்தில் ஒற்றுமையைப் பேண முடியும் எனத் தெரிவித்தார்.

அகீதாவில் முரண்பட்ட அமைப்புக்களுக்கும் எமது சகிப்புத் தன்மை விஸ்தரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும்.

இதனுடைய அர்த்தம் ஒருவருடைய கொள்கையை அடுத்தவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரவர் கொள்கைகளில் சகிப்புத் தன்மையைப் பேணி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதே இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் பணி என பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஷ்-ஷெய்க் அப்துல் முஜீப் எடுத்துக் காட்டினார்.

ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்ஸில் சார்பில் கருத்து வெளியிட்ட தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி அல்-ஹாஜ் மௌலவி எம்ஆர்எம் சில்மி நூரி அவர்கள், எமது பாரம்பரிய இஸ்லாமிய வரலாறுகளின் அடிப்படைகளை நாங்கள் தொடர்ந்து வந்தால் இந்த நாட்டில் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பாதுகாக்க முடியும்.

அடுத்தவர்களையும் ஏற்றுக் கொண்டு பொதுவான இலக்கை நோக்கி இந்த நாட்டில் நாங்கள் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கொள்கை வேறுபாடுகளை நாம் மறந்து விட வேண்டும் எனவும் குர்ஆன் ஹதீஸுக்கு ஏற்ப செயல்படுவர்கள் அனைவருமே ஒற்றுமைப்பட முடியும். அதற்கு மாற்றமாகச் செயல்படுபவர்களால் தான் ஒற்றுமைப்பட முடியாது எனவும் இலங்கை ஷரீஆ கவுன்ஸிலின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க் கலாநிதி ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர் பஹ்ஜி தெரிவித்தார்.

இந்த இடத்தில் நாம் கொள்கை வேறுபாடுகளைப் பேச வேண்டியதில்லை. அதற்கான பல இடங்கள் அவரவர்களுக்கு இருக்கின்றன. இங்கு நாங்கள் ஒற்றுமைப்படுவதை மட்டுமே பேச வேண்டும் என அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் துல்கிப் அலி மௌலானா தெரிவித்தார்.
அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் மௌலவி யூனுஸ் தப்ரீஸ் கருத்து வெளியிடும் போது, மார்க்க விவகாரங்களில் ஒற்றுமைப்படச் செய்வது எம்மால் முடியுமான பணியல்ல. யாரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அவரவரது ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

எது சரி எது பிழை என்பதனை மக்கள் முடிவெடுக்கட்டும். இந்த இடத்தில் மார்க்கப் பிரச்சினைகளை ஒருவர் முன்வைப்பதையும் அதற்கு அடுத்தவர் பதிலளிப்பதையும் நாங்கள் தவிர்த்துக் கொள்வோம் எனக் கூறினார்.
இஸ்லாத்தைப் பேசுவதைத் தவிர்த்து விட்டு ஒற்றுமையைப் பேச முடியாது எனக் கருத்து வெளியிட்ட இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் அஷ்-ஷெய்க் உஸைர் இஸ்லாஹி அவர்கள், கருத்து வேறுபாடுகளில் நாம் ஆழ்ந்து போகத் தேவையில்லை.

ஒன்றாக செயற்படத் தொடங்கினால் கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவதற்கு நேரம் இருக்காது. வரலாற்றில் முஸ்லிம் சமூகம் சும்மா இருந்த காலங்களிலேயே கருத்து வேறுபாடுகள் உச்சமடைந்திருக்கின்றன. நபிகளாரின் காலத்திலும் ஒற்றுமைப் பேரவை உருவாக்கப்பட்டது.
அங்கு யார் சரி என்று விவாதிக்கவில்லை. மதீனாவைக் கட்டியெழுப்புவது பற்றியே அங்கு பேசப்பட்டது. அதேபோல இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லீம்களாகிய எங்களுக்கும் ஒற்றுமையை கட்டியெழுப்ப பொது வேலைத் திட்டமொன்று இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்தப் பேரவை முஸ்லிம்களுக்குப் பொதுவான விவகாரங்களில் வழிநடத்த வேண்டும். நாட்டில் 1600 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. 300 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு பதிவு மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயங்களில் பேரவை வழிகாட்ட வேண்டும் என கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்-ஹாஜ் சிராஸ் நூர்தீன் கூறியதோடு அதற்கானதொரு மகஜரையும் முன்வைத்தார்.

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவரும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகருமான அல்-ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், செரன்திப் ஐக்கிய நிறுவனத்தின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க் ஏஎன்எம் பிர்தௌஸ் மன்பஈ உட்பட மற்றும் பலரும் நிகழ்வில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இலங்கை முஸ்லிம்களின் முகவரி முன்னோடிகளான அகில இலங்கை சோனகர் சங்கம், அகில இலங்கை மலே சங்கம், அகில இலங்கை மெளலானா சங்கம், அகில இலங்கை மேமன் சங்கம் மற்றும் அகில இலங்கை சம்மான் சங்கம் ஆகிய அமைப்புகளை இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்துவ அமைப்புகளாக இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி சபையில் முன்மொழிந்ததை அனைவரும் ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நோக்கத்தை வரையறுத்து அது செயற்படுவதற்கான யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் இப்ராஹிம் அன்ஸார் முன்வைத்த கருத்தை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகளைத் துவங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிராத சில நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களும் அன்றைய தினம் நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் சார்பாக அஷ்-ஷெய்க்ஹ் எம்.ஆர்.எம். பௌஸர், தேசிய சூறா சபையின் சார்பாக எம்.ஐ.எம். ஸாஹிம், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்ஸில் சார்பாக அல்-ஹாஜ் தஸ்லீம் மெளலவி, இலங்கை வக்ஃபு சபை சார்பாக அல்-ஹாஜ் மௌலவி எம்என்எம் இஜ்லான் காஸிமி, அகில இலங்கை தரீக்காக்கள் சூபி உயர்பீடம் சார்பாக அல்-ஹாஜ் சப்ரி கெளஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாக அல்-ஹாஜ் ஸாதிக் ஷிஹான், அஸ்ஸுன்னா ட்ரஸ்ட் சார்பாக பேராசிரியர் இன்திகாப் சுபர், தஃவதே இஸ்லாமி சார்பாக அல்-ஹாஜ் அல்-ஆலிம் தாஜுல் முனீர் அத்தாரி — காதிரி, ஸ்ரீ லங்கா கதீப் மற்றும் முஅத்தின் சம்மேளனத்தின் சார்பாக அல்-ஹாஜ் காரி அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் ஜப்பார், அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் சார்பாக மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
கூட்டத்தின் செலவினங்களை நிர்வகிக்கும் வகையில் உண்டியல் ஒன்றும் அன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம், ஹஜ் கமிட்டி, அகில இலங்கை மஜாலிஸுல் உலமா, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் ஒன்றியம், அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவை, அகில இலங்கை வைஎம்எம்ஏ, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், அஸ்ஸுன்னா ட்ரஸ்ட், பொரல்லை அஹதியா, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், தஃவதே இஸ்லாமி, கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஹித்மதுல் உலமா நலன்புரிச் சங்கம், மீட்ஸ், தேசிய சூறா சபை, ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி, ஸலாமா, ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம், ஸெரன்திப் ஐக்கிய நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் அஷ்-ஷெய்க் என்எம்எம் மிப்லி அவர்களும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்இமிய்யதுல் உலமாவின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் றிஸ்வி முப்தி இஸ்லாமிய ஐக்கிய பேரவையுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அ.இ.ஜ. உலமாவின் சார்பாக பேரவையின் ஒருங்கிணைப்பாளராக அஷ்-ஷெய்க்ஹ் றிபாஹ் ஹஸன் மதனி செயல் படுவார் எனவும் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் செயல்பாடுகளுக்கு அ.இ.ஜ.உலமாவின் பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்த தகவலை பேரவையின் நிர்வாக உத்தியோகஸ்தர் பியாஸ் முஹம்மத் சபையில் தெரிவித்தார்.

கூட்டத்தை இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் நிர்வாக உத்தியோகஸ்தர் பியாஸ் முஹம்மத் நடத்தினார். இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி நன்றியுரை நிகழ்த்தினார்.

ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்ஸிலின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் கலாநிதி ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர் பஹ்ஜி அவர்களின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...