72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
நிதி அமைச்சு மற்றும் சுகாதாரத் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
72 சுகாதாரத் தொழிற்சங்கங்களின் தொழில்சார் உரிமை குறித்து நிதியமைச்சின் பரிந்துரையின் பேரில் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
எவ்வாறெனினும் குறித்த பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதார ஊழியர்களுக்கான சாதகமான தீர்வுகள் இதன்போது எட்டப்படவில்லை.
இதேவேளை நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால் நாளை (இன்று) காலை 6.30 மணி முதல் போராட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதனால் வைத்தியசாலை கட்டமைப்புகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளதுடன், நோயாளிகளும் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எனவே இதற்காக நேயாளிகளிடம் மன்னிப்பு கோருவதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.