ஞானவாபி மசூதி நிலத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற மறுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது.
இதன் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுப்பிய பழமையான ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது.
நூற்றாண்டு பழமை கொண்ட இந்த மசூதி வளாகத்தின் வெளிச் சுவற்றுக்கு அருகே சிங்கார கவுரி அம்மன் சிலையும் இருந்து வருகிறது. இந்து – முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக சொல்லப்பட்ட இந்த இடம் பிரச்சனைக்குரிய இடமாக மாறி உள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு பூஜை நடத்த அனுமதிகோரி பெண் பக்தர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று பலன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் போன்ற ஒரு கல் இருப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
அதன் பின்னர் சிவலிங்கம் போன்ற கல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
ஆனால் மசூதி நிர்வாகமோ, கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் இல்லை, தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரூற்று போன்ற அமைப்பு என விளக்கமளித்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தொல்லியல்துறை மசூதியில் செய்த அறிவியல்பூர்வ சர்வே முடிவுகளை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாரணாசி நீதிமன்றமோ இந்து கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா என்பதை உறுதிபடுத்துமாறு சொன்னது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள சிவலிங்கம் எனப்படும் நீரூற்று உள்ள இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர உத்தரவிட்டார். இதனை அடுத்து 7 நாட்களில் பூஜை நடத்தப்படும் என இந்து பிரிவு அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகி மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசிவிட்டு விபரம் சொல்வதாக அவர் உறுதியளித்து இருக்கிறார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாக உச்சநீதிமன்ற பதிவாளர் மசூதி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.