பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பெரும் இழுபறிக்கு நடுவே ஓட்டு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வென்றுள்ளனர்.
2வது இடத்தில் நவாஸ் ஷெரீப் கட்சி பிடித்துள்ள நிலையில் அவர்களின் ஆதரவாளர்கள் வென்ற தொகுதிகள் எத்தனை? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 8 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. மேலும் இம்ரான் கான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அவர வேட்பாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலால்வால் பூட்டோ சர்தாரியின் பிபிபி கட்சிகள் இடையே கடும் போட்டி நடந்தது.
பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த 70 தொகுதிகளை தவிர்த்து 266 தொகுதிகளுக்கு தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்துவிட்டார்.
இதனால் 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும். இடஒதுக்கீடு தொகுதியை சேர்த்து பார்த்தால் மொத்தம் 169 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சியை பிடிக்கலாம்.
கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் இம்ரான் கானின் ஆதரவாளர்களான சுயேச்சை வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.
இதையடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து பல காரணங்களால் ஓட்டு எண்ணிக்கை தாமதப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் 4வது நாளான இன்று ஓட்டு எண்ணிக்கை என்பது முடிவடைந்துள்ளது.
இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சியினர் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிலால்வால் பூட்டோவின் பிபிபி 53 தொகுதிகளில் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கராச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த உருது மொழி பேசும் மக்களின் முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதுதவிர பிற தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றுள்ளன. இருப்பினும் பாகிஸ்தானில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் நவாஸ் ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். பிலால்வால் பூட்டோவின் கட்சி மற்றும் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.