கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து மாணவர்கள் மீது வீழ்ந்த சம்பவம் தொடர்பில், கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 வயது சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த அனர்த்தத்தில் மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் குழுவொன்று பாடசாலை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள காணியில் இருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.