80 வருட இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.
கொழும்பில் காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுதந்திர நிகழ்வில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கரிநாள் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு
மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த 17 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு இரவோடு இரவாக பொலிஸாரினால் உரியவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய ஆர்பாட்ட பேரணிக்குஎ ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நிலையிலேயெ குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.