இலங்கை துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் தகவல்களின் படி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு அமைச்சர் மிரி ரெஜீவேவுக்கும் இடையில் 2024 மார்ச் 14ல் இராஜதந்திர ஒப்பநதம் ஒன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்துக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் தெடங்கப்படவுள்ளன.
மிகவும் கொடூரமான அடக்கு முறையுடன் கூடிய ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்தின் நியாயங்களைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், உலகம் முழுவதும் பொங்கி எழுந்துள்ள பொது மக்களின் கருத்துக்களையும் புறந்தள்ளிவிட்டு தனது காட்டு மிராண்டித் தனத்தை அப்பாவி நிராயுதபாணிகளான பலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன்றைய சூழலில், பலஸ்தீன அப்பாவி மக்களை ஒருபுறம் கொள்று குவித்தும் இன்னொரு புறத்தில் அவர்களின் வீடு வாசல்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
காஸா பிரதேசம் முழுவதும் மயான பூமியாக இஸ்ரேலால் மாற்றப்பட்டுள்ள நிலையில் இலங்கை இஸ்ரேலுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேளையில் குறைந்தபட்சம் 29,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 58416 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகளில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என்று வேறு படுத்தப்படவில்லை.
ஆனால் இவர்களிவ் சுமார் 70 வீதமானவர்கள் பெண்களும் சிறுவர்களும். இவை தவிர மேலும் கிட்டத்தட்ட 7000 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் இறந்திருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் தகவல்களின் படி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் காஸாவில் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது காயப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
காஸா பகுதியில் உள்ள கட்டிடங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் வாழ்ந்த 22 லட்சம் மக்கள் தொகையில் 85 வீதத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அநேகமானவர்கள் தென் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல் இலக்குகள் மாறி மாறி தொடரப்படுவதால் பலர் பல தடவைகள் அடுத்தடுத்து இடம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதி முகாம் வளவுகளில் 14 லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பலர் வெவ்வேறு இடங்களிலும் வீதிகளிலும், தறந்த வெளிகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சுமார் 20 லட்சம் பலஸ்தீனர்கள் கொட்டும் மழையில் நடு நடுங்கும் குளிரில் உண்ண உணவும் குடிநீரும் மருந்து வசதிகளும் இன்றி தற்காலிக கூடாரங்களுக்குள் முடங்கியுள்ளனர்.
அவர்களை பட்டினியால் வாட்டி மரணத்தை நோக்கி தள்ளுவதே இஸ்ரேல் மற்றும் அதன் அமெரிக்க, ஐரோப்பிய பங்காளிகளின் திட்டமாகும். காஸாவின் வடக்கில் உள்ள கட்டிடங்களில் மூன்றில் ஒரு பகுதி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த பிரதேசத்திலும் சுமார் 33 வீதமான கட்டிடங்கள் இவ்வாறு அழிக்கப்படடுள்ளன.
ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்த அடுத்த நாளான 2023 அக்டோபர் 8 முதல் இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கு தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்து பொருள் என்பன உட்பட உயிர்வாழத் தேவையான அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இரத்துச் செய்துள்ளது.
தற்போது காஸா மக்கள் வாழுவதற்குரிய ஒரே பிரதேசமாகக் காணப்படும் காஸாவின் தென்பகுதியில் உள்ள றபா பாதுகாப்பு வளைய பிரதேசத்துக்குள் வாழும் சுமார் 15 லட்சம் மக்களையும் கூட அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.
இந்தப் பிரதேசத்துக்குள் ஆக்கிரமிப்புக்கான முஸ்தீபுகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இனிமேல் எங்கு செல்ல முடியும்? என்பது தான் காஸா மக்களும் உலகின் ஏனைய இடங்களில் வாழும் மக்களும் எழுப்பியுள்ள கேள்வியாகும்.
இதனிடையே இஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் இருந்து வடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்கள் தாங்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், உலோகப் பொல்லுகளாலும் மற்றும் மின்சாரக் குச்சிகளாலும் தாக்கப்பட்டதாகவும் இன்னும் பல்வேறு விதமாக அவமானப் படுத்தப்பட்டதாகவும கொடுமை படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் காஸாவில் இன்று இடம்பெற்று வருகின்ற இனப் படுகொலைகள் மற்றும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் இஸ்ரேலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி இஸ்ரேலின் இனஒழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு செயல்களுக்கு கண்டனங்களை வெளியட்டுள்ளதோடு அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இஸ்தான்புல், வாஷிங்டன், சிட்னி, டப்ளின், பெர்லின், பாரிஸ், வியன்னா, பிறேஸிலியா, கேப்டவுன், றாபாத், பக்தாத் என இது இன்னமும் தொடருகின்றது.
இவ்வாறானதோர் மோசமான பின்னணியில் தான் இலங்கை இஸ்ரேலுடன் இந்த உடன்படிக்கையை செய்துள்ளது. பொதுவாக உலகம் முழுவதும் உள்ள சமாதானத்தை விரும்பும் சகல பொது மக்களினதும் விருப்பங்களை புறந்தள்ளிவிட்டு குறிப்பாக பலஸ்தீன மற்றும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆட்சியில் உள்ள இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்து, இஸ்லாத்தை அவமானப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் வன்முறைகளைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த அரசுதான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நாசகார பிரசாரத்தில் இந்த நாட்டின் ஊடகங்களும் பிரதான பங்கினை ஏற்றிருந்தன.
இலங்கையின் இன்றைய அதே ஊடகங்கள் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தை எடுத்துக் காட்டவும் தவறியுள்ளன. உண்மையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியா மற்றும இஸ்ரேலிய யுத்த வெறியர்களால்; மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் காட்டுமிராண்டித் தனங்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தை விட மேசமானவை.
அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியா மற்றும் இந்திய, இஸ்ரேலிய யுத்த வெறியர்களின் ஆதரவோடு காஸாவில் இடம்பெற்று வரும் சம்பவங்களின் உண்மை நிலையையும் இலங்கை மக்களுக்கு கூறாமல் இலங்கையர்களுக்கு உண்மைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இஸ்ரேலின் பிரசன்னம் என்பது உண்மையிலேயே யாருக்கும் நல்ல செய்தியல்ல.
இஸ்ரேல் என்பது அதற்கு மட்டுமே நண்பன். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அதன் வெறுப்புணர்வு என்பது அதன் இரத்தத்தில் கலந்த ஒன்றாகும். இந்த நாட்டில் உள்ள இனவாத சக்திகளை அவர்கள் விலை கொடுத்து வாங்கி இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
அவ்வாறு இடம்பெறுமானால் அது ஏற்கனவே பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலும் அரசியல் ஸ்திரமற்ற நிலையிலும் இருக்கின்ற இந்த நாட்டுக்கு மேலும் மோசமான விளைவுகளையே கொண்டு வரும்.
(முற்றும்)