ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று (5) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்ஷவை வரவேற்றனர்.
பின்னர் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பசில் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சிறிது நேரம் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சஹன் பிரதீப் விதான, ஜயந்த கட்டகொட, இந்திக அனுருத்த, அருந்திக பெர்னாண்டோ, திஸ்ஸகுட்டியாராச்சி மற்றும் சுமார் 25 எம்.பி.க்கள் குழுவினர் பசில் ராஜபக்சவை வரவேற்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனியார் செய்தி சேவையொன்றிற்கு உறுயளித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன இன்று செவ்வாய்க்கிழமை முதல் முதல் முழுமையாக தேர்தல் ஆயத்தங்களில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறம் பசிலின் வருகை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரஜையான அவரை இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமய கட்சி கேலிக்குள்ளாக்கியுள்ளது.
“அமெரிக்காவில் உழைத்து இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணியையே தாம் விரும்புகிறோம் ஆனாலும் துரதிஷ்ட வசமாக இந்த சுற்றுலாப் பயணி (பசில்) இலங்கையில் உழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா மேற்கொள்கிறார்“ என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில விமர்சித்துள்ளார்.