ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 100 வலயங்களில் நிறுவப்பட்ட அனைத்து வலய மாணவர் பாராளுமன்றங்களிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெற்ற தலா இரு உறுப்பினர்கள் தேசிய மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் ஒத்துழைப்புடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், பிரதி சபாநாயகர் மற்றும் 10 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை என்பதால் எமது நாடு விசேடமான ஒரு நாடாகும்.
1833ஆம் ஆண்டில் எமது நாட்டின் சட்டமன்றம் நிறுவப்பட்டது. அன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளுநரால் இலங்கையர்கள் சிலர் இதற்கு நியமிக்கப்பட்டனர்.
1912 இல் இலங்கையர் ஒருவரை உறுப்பினராகத் தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. சொத்து மற்றும் கல்வி அடிப்படையில் சுமார் ஐயாயிரம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் 1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக நாம் திகழ்ந்தோம். அன்று முதல் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியினால் தடை விதிக்கப்படாத ஒரே ஆசிய நாடாகஇலங்கை காணப்படுகிறது.
1931 க்குப் பிறகு, ஏனைய அனைத்து நாடுகளிலும் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை இழந்துள்ளன. எம்மை எவ்வளவுதான் விமர்சித்தாலும், குற்றம் சாட்டினாலும், பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறோம்.