அண்மையில் மறைந்த நுழாருல் காதிரிய்யா மற்றும் அன்நஜா அரபுக்கல்லூரிகளின் அதிபரும் ஆன்மீக அறிஞருமான ஷெய்க்ஹுன்நஜா முஹாஜிரீன் ஆலிம் அவர்களுடைய மறைவுக்கு இலங்கை சர்வமத தலைவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் ஆகிய பௌத்த, இந்து,இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சர்வமதத் தலைவர்கள் ஆன்மீக அறிஞரான ஷெய்க்ஹுன்நஜா முஹாஜிரீன் ஆலிம் அவர்களுடைய மறைவு ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளனர்.
சமய, சகவாழ்வு மற்றும் சர்வமத ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக இலங்கையில் சமயங்கள் மற்றும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதேவேளையில், ஷெய்க்ஹுன்நஜா அமைதியை வலுப்படுத்த பல்வேறு வழிகளில் அவர் செயல்பட்டதாக சர்வமதத் தலைவர்கள் தனது வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்
மேலும், தன்னிடம் கல்விகற்ற ஆயிரக்கணக்கான ‘தனது மாணவர்களான ‘ ஆலிம்களை மத நல்லிணக்கத்தை பேணி சகவாழ்வுடன் இலங்கையிலுள்ள சகல மதத்தாருடனும், இனத்தாருடனும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான பல வழிகளையும் கற்றுக்கொடுத்த தலைசிறந்த ஒரு ஆன்மீக ஆசானாக திகழ்ந்துள்ளார் எனவும் அவருடைய மகிமையான செயல்களில், மாண்புமிகு இறைதூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நபியவர்களுடைய மாபெரும் நற்குணம் நிறைந்த வழிகாட்டலை நாம் காண்கிறோம்.
மேலும் இஸ்லாமிய மதப் பெரியார் என்ற வகையில், இன அமைதி மற்றும் சர்வமத ஒற்றுமைக்காக வேண்டி பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஷெய்க்ஹுன்நஜா அவர்களின் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், அவர் நேசர்களுக்கும் மற்றும் அமைதியை மதிக்கும் அனைத்து மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்று சர்வமதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.