கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சுவார்த்தை: காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு!

Date:

காசாவில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியில் அமெரிக்கா உட்பட மத்தியஸ்த நாடுகள் ஈடுபட்டு வரும் சூழலிலேயே அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஐந்து மாதங்களை எட்டும் இந்தப் போரை நிறுத்தும் முன்வொழிவு தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் எகிப்து, அமெரிக்கா மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் அதேபோன்று ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவுக்கு உதவிகளை வழங்குவது மற்றும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகியவை உள்ளடங்கிய பரந்த அளவில் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றிருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலிய படை முழுமையாக வாபஸ் பெற ஹமாஸ் வலியுறுத்துவது உட்பட சில விடயங்களில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோருகிறது. எனவே, உடன்படிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது’ என்று அலபாமாவில் ஞாயிறன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று பேசிய ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்துக்கு மாறான தொனியில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி, காசாவுக்கு உதவிகளை கணிசமாக அதிகரிக்க இஸ்ரேல் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காசாவில் மக்கள் பட்டினியில் இருப்பதாகவும் நிலைமை ‘மனிதாபிமானமற்ற’ வகையில் உள்ளது என்றும் அவர் வர்ணித்தார்.

‘காசாவில் பாரிய அளவான வேதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவசர போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகும் முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை அடையும் முயற்சியில் எகிப்து தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று எகிப்து உளவுச் சேவையின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘அல் கஹெரா நியூஸ்’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதிநிதிகள் இன்றியே கெய்ரோவில் இரண்டாவது நாளாக நேற்று (04) பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காசா மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வடக்கில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவிகளை எடுத்துச் செல்வது தோல்வி அடைந்து வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது.

காசாவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி ஐ.நா எச்சரித்திருக்கும் சூழலில் அமெரிக்கா முதல் முறையாக கடந்த சனிக்கிழமை காசாவுக்கு வானில் இருந்து உணவு உதவிகளை போட்டது.

‘இக்கட்டான மனிதாபிமான சூழ்நிலையைத் தணிக்க காசாவுக்குள் உதவி விநியோகத்தை விரிவுபடுத்துவது மிகவும் அவசியமாகும்’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...