இலங்கையர்களின் நிதியினாலேயே இலங்கை மக்களுக்குச் சேவை செய்யும் முன்னணி நிறுவனமான ஸம் ஸம் தனது தசாப்த காலப் பூர்த்தியை கடந்த செவ்வாயன்று (27) தனது வெற்றிக்குப் பங்களித்த பலரையும் அழைத்து அனுஷ்டித்தது.
தெஹிவலை, அத்திடிய ஈகள்ஸ் லேக்ஸைடில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முஸ்லிம் சமூகத்தின் பலதரப்பட்ட முக்கியஸ்தர்களும் முஸ்லிமல்லாத பலரும் பங்கேற்றனர்.
முப்பது பேர் கொண்ட சபையொன்றினால் முப்தி யூசுப் ஹனிபா அவர்களின் தலைமையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்ற ஸம் ஸம் நிறுவனத்தின் வெற்றிப் பயணம் வந்திருந்தவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.
மதம் கடந்த மனித நேயம் என்ற ஸம் ஸம் நிறுவனத்தின் மகுட வாசகத்துக்கு ஏற்ப நாட்டின் பல பாகங்களிலும் தேவையுடையவர்களுக்கு இன மத பேதமின்றி ஸம் ஸம் சேவையாற்றியிருப்பதை வருகை தந்தவர்களுக்கு அறிந்து கொள்ள முடியுமாகவிருந்தது.
அரச சார்பற்ற நிறுவனமாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுச் செயற்பட்டு வந்த ஸம் ஸம் கடந்த பத்து வருட காலங்களின் அடைவாக அமெரிக்காவிலும் தனது பிரிவொன்றை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் (ECOSOC) விஷேட ஆலோசனை அந்தஸ்தை (Special Consultative Status) பெற்ற இலங்கையின் சிறந்த 09 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றாக ஸம் ஸம் பவுன்டேஷன் விளங்குகிறது.
தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பல்லாயிரக்காண மாணவர்களின் அறிவுத் தேவைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதோடு பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைகளை மேம்படுத்துவதற்கான பல நிகழ்ச்சிகளையும் ஸம் ஸம் பவுன“டேசன் ஒரு தசாப்தமாக மேற்கொண்டு வந்துள்ளதை நிகழ்வின் மூலம் அறிய முடியுமாகவிருந்தது.
ஸம் ஸம் குடும்பத்தின் ஒன்று கூடலாகக் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வில் தென்னாபிரிக்காவின் சன்மார்க்க அறிஞரும் பேச்சாளரும் நூலாசிரியருமான ஷேக் முப்தி ஸுலைமான் மூலா மற்றும் ஜாமிஆ நளீமியாவின் முதல்வர் அஷ். ஏசி அகார் முஹம்மத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸம் ஸம் பவுன்டேஷனின் நிறைவேற்று அதிகாரி மொஹமட் ஹிஷாமினால் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் அஷ். முப்தி யூசுப் ஹனிபா, நிறுவனத்துக்குப் பங்களிப்புச் செய்து மறைந்த பல பிரமுகர்களையும் ஞாபகப்படுத்தியதோடு நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த வள்ளல்களுக்கும் தனது குடும்பத்தாராகக் கருதுகின்ற ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.அடுத்த வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் பற்றியும் அவர் இதன்போது விபரித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் இன்னும் பல தரப்புக்களையும் அழைத்து ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகளையும் அதிகளவில் அழைத்துப் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாக ஸம் ஸம் குடும்ப ஒன்று கூடல் அமைந்திருந்தது.