பொய்யான தகவல்களைக் கூறி சமயம் சார்ந்த அமைப்புகளுக்கு இடையூறு விளைவித்து சர்ச்சைகளை உருவாக்குதல், அடுத்தவரது மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்குடன் தவறான விடயங்களைப் பரப்புதல் போன்ற விடயங்கள் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் நிலையில் சமூக ஐக்கியத்தைக் குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கென 0112886067 என்ற இலக்கத்தை பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானாவுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய ஐக்கிய பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்பாடுகள் நாட்டின் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் பலப்படுத்துவதற்கு நல்லதோர் முன்மாதிரியாக உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நான்காவது அமர்வு கடந்த புதனன்று (06) ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றபோதே கலாநிதி ஹஸன் மெளலானா இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய ஐக்கிய பேரவை முன்னின்று உழைத்து வருகிறது.
தற்பொழுது முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சுமுகமான நிலை ரமழான் மாதத்திலும் தொடரப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்தும் மாதமாக இந்த ரமழான் அமைய வேண்டும். இதற்கு அடுத்தவர்களது மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளைப் பாதிக்காமல் நடந்து கொள்வது முக்கியமாகும்.
ஐக்கியத்தைக் குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கென பாதுகாப்பு அமைச்சு புதிதாக மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதில் இருந்து ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என கலாநிதி ஹஸன் மௌலானா மேலும் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான யாப்பு வரையும் பணிகள் முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.எம். அப்துல் கபூர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாப்பில் அடங்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பில் அன்றைய கூட்டத்தில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற 30 அமைப்புக்களதும் கருத்துக்கள் பெறப்பட்டு பேரவைக்கான யாப்பு வரையப்படவுள்ளது.
ரமழானில் அடுத்தவர்களது உணர்வுகளைக் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற அமைப்புக்கள் கரிசனத்துடன் செயல்படும் என அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.