இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் “மலையகம் 200” எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா அண்மையில் கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து எம்.தீபன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கற்பிட்டியைச் சேர்ந்த எம்.எச்.எம். சியாஜ் ஊடகத்துறை மற்றும் சமூகசேவை செயற்பாட்டிற்கான சாதனையாளர் விருதாக “சிறீ விக்ரமகீர்த்தி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சான்றிதழ், பதக்கம் மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இவ்விருது வழங்கல் விழாவின் பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும், கௌரவ அதிதியாக தினகரன், வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் டி. செந்தில்வேலவர் ஆகியோருடன் இன்னும் விசேட அதிதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் சுமார் 24 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் தன்னை அர்ப்பணித்து பல பத்திரிகைகளின் கற்பிட்டி பிரதேச செய்தியாளராகவும், கற்பிட்டி பிரதேசத்திற்கான பத்திரிகைகளாக “அரவம் “, “விடியல்,” மற்றும் கற்பிட்டியின் முதலாவது மின்னிதழ் பத்திரிகையான “கருப்பு வெள்ளை” என்பவற்றின் பிரதம ஆசிரியராக இருந்து தனி முயற்சி மற்றும் ஒரு சிலரின் உதவிகள் ஊடாக பத்திரிகைகளை வெளியிட்டுள்ள இவர் சமூக சேவை பணியில் “இஸ்லாமிய இளைஞர் நலன்புரி ஸதகா ஒன்றியம்” மற்றும் “சமூக அபிவிருத்தி ஒன்றியம் “, ” நஷ்ர் பவுண்டேஷன் “என்ற அமைப்புக்களை 2000 ம் ஆண்டு காலப்பகுதியில் நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்து இன்று வரை பல்வேறுபட்ட ரீதியில் சமூக சேவை பணிகளையும் இவர் கற்பிட்டியில் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் விருது வழங்கும் விழாவில் நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 பேர் சிறீ விக்ரமகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(எம்.யூ.எம்.சனூன்)