இந்தியாவில் இன்று தேர்தல் திருவிழா: 16.63 கோடி வாக்காளர்கள்; 1.87 இலட்சம் வாக்குச் சாவடிகள்;

Date:

இந்தியா முழுவதும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இன்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த தேர்தல் திருவிழாவின் முதல் நாள் கொண்டாட்டம்.

18வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரியில் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் இன்று,  நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகின்றது. காலை முதலே வாக்குசாவடி மையங்களில் குவிந்த வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் மக்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் வாக்களிக்க வந்துகொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக இளையர்களும் முதல் முறை வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகிறார்கள்.

நாட்டின் தலைவிதியோடு, தங்கள் தலைவிதியையும் தீர்மானிக்கும் தருணம் இது என்பதால், எதிர்பார்ப்பு, ஏக்கம், நம்பிக்கை என பல வித உணர்சிகளை சுமந்த வண்ணம் மக்கள் வாக்களிக்க வந்துகொண்டு இருக்கிறார்கள்.

நாம் நமது கடமையை முறையாக செய்தால்தான் நாளை அமையும் அரசிடம் கேள்வி கேட்கும் உரிமையும் நமக்கு கிடைக்கும்.

அனைத்து கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி தன்னார்வலர்களும் தொண்டர்களும் மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தையும், தேவையையும் புரிய வைத்து, அவர்கள் வாக்களிக்க ஏதுவான வசதிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் மக்களுக்கு வசதியாக பல ஏற்பாடுகளை செய்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட  முதியவர்களுக்கான வாக்குகள் ஏற்கனவே வீடுகளுக்கே சென்று சேகரிக்கப்பட்ட நிலையில், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்காகவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.

இதற்கிடையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வாக்கும் குரலும் முக்கியமானது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...