ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம்,மொழிப்பெயர்ப்பு, காப்புரிமை போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இத்தினத்தை முன்னிட்டு எழுத்தாளர் மஷ்ஹூர் அவர்களின் பேஸ்புக் ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகின்றோம்.
பொதுவாக இந்த மாதிரி ‘தினங்கள்’ மீது எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருப்பதில்லை. எனினும், இதை விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம்.
புத்தகத்திற்கு ஒரு தினம் என்பது, வாசிப்பைத் தூண்டும் என்பதால் அது குறித்து சில விடயங்களைப் பகிரலாம்.
இந்த வருட புத்தக தினத்தின் மையக் கரு: “உங்கள் வழியில் வாசியுங்கள்” – “Read your way” என்பதுதான்.
யுனெஸ்கோ (UNESCO) பிரகடனப்படுத்தியிருக்கும் இன்னொரு விடயம், உலக புத்தகத் தலைநகரம் (World Book Capital).
பிரெஞ்சு நகரான Strasbourg, 2024 இன் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கானாவின் அக்ரா (Accra) நகரம் உலகப் புத்தகத் தலைநகராக இருந்தது. அடுத்த வருடம் பிரேசிலின் றியோ டி ஜெனீரோ நகரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரெஞ்சு நகரில், ஒரு வருட காலமாக (23 ஏப்ரல் 2024 – 22 ஏப்ரல் 2025 வரை) 200 இற்கும் மேற்பட்ட நூல் – வாசிப்பு சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அங்குள்ள மக்களோடு கலந்து பேசித்தான் இதைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் Book Takeaway. உணவுப் பொருட்களுக்கான Takeaway நமக்குத் தெரிந்த ஒன்று.
நமது தமிழ்ச் சூழலில், புத்தக வெளியீட்டு மற்றும் விற்பனை நிலையங்கள் விலைக்கழிவுகளை அறிவித்துள்ளன. சில சந்திப்புகள் உள்ளன. அவ்வளவுதான்.
நாம் புத்தகப் பண்பாட்டில் எங்கிருக்கிறோம் என்ற கேள்விகள் எழுகின்றன. எனது புத்தக ஈடுபாடு – வாசிப்புப் பயணம் தொடர்பில் இன்று மாலை பேசவுள்ளேன்.
இது முகநூலில் நேரலையாக இடம்பெறும்.
1980 இல் 1 ஆம் வகுப்பில் படிக்கும்போது, அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் ஒரு நூலகம் இருந்தது.
அதில் ‘நாட்டியராணி’ என்றொரு கதைப்புத்தகத்தைத்தான் முதலில் எடுத்துப் படித்தேன். அதன் அட்டைப்படம் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஒரு ஆட்டுக் குட்டி 2 காலில் நின்று கொண்டு, முன்னங்கால்களைக் கைகளாகக் கொண்டு பறையடிக்கும் படம்.
இந்த வருடம் ஜனவரி 1 முதல் புத்தகங்களுக்கு 18% VAT வரி விதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களுக்கு வரி விதிப்பதில்லை என்ற யுனெஸ்கோ பிரகடனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
இதை நீக்குமாறு பலரும் அரசைக் கேட்டிருந்தார்கள். ஜனாதிபதியும் இதை மீளாய்வு செய்வதாக மார்ச் 16 ஆம் திகதி வாக்களித்திருந்தார். ஒன்றரை மாதம் கடந்து விட்டது. இன்னும் தீர்வு இல்லை.
இலங்கையின் அறிவுஜீவித வறுமையை (Intellectual poverty) இது இன்னும் அதிகரித்து விடும்.
பொருளாதாரத்தால் மட்டுமல்ல, அறிவாலும் நலிந்து போகும் ஒரு பாதையிலேயே இந்த நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.
பள்ளிக் கல்வியில் வாசிப்புக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. பள்ளி நூலகங்கள் பல புழுதி படிந்து போயிருக்கின்றன. (ஒருசில விதிவிலக்குகள் உண்டு).
இன்றைய நாளில்… ‘அறிவார்ந்த சமூகம்’ என்ற இலக்கில் பயணிப்பதைத் தூண்டுவோம். புத்தகப் பண்பாட்டில் – வாசிப்புக் கலாச்சாரத்தில் நாம் எங்கிருக்கிறோம்? நமது ஊர்கள் எப்போதாவது புத்தகத் தலைநகராக மாறும் வாய்ப்புகள் உண்டா?
சிராஜ் மஷ்ஹூர்