திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தவுள்ளார்.
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது.
இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர்.
ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.
இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார்.
அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
அதில், “மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
-
மூலம்: பிபிசி தமிழ்