மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக தான் முக்கிய காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, 1974ம் ஆண்டு இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
“நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இலங்கைக்குத் கச்சத்தீவை வழங்க விரும்பினார். கச்சத்தீவு தொடர்பான பல தசாப்தங்களாக நிலவி வரும் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான உரிமைகள் பிரச்னை, திடீரென உருவாகவில்லை.
அது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது. 1974-ன் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.
மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்னை குறித்து பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார்.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், இதே பிரச்னை குறித்துக் கேட்டிருக்கிறார். இதுவரை தமிழக முதல்வர்களுக்கு 21 முறை இது தொடர்பாகப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன.
இன்றைய மத்திய அரசு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய சூழலிலிருந்தாலும், இது இப்போதுதான் நடந்தது என்பது போல இரு கட்சிகளும் செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.