கடந்த 3 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையாக உள்ளது கச்சத்தீவு. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அண்ணாமலை பெற்ற பதில்கள் தான் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் ஈர்த்து வரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இந்திய தரப்பில் இருந்து கச்சத்தீவு தொடர்பாக எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நீண்டகால பிரச்னையாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை நேற்று முன் தினம் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸும், திமுகவும் சதி செய்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி, திமுக-வின் இரட்டை வேடம் கலைந்துள்ளதாகவும் சாடியிருந்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் ஒப்புதலுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், தற்போது கச்சத்தீவை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், கச்சத்தீவு இலங்கையின் எல்லைக்குள் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.
இலங்கை உடனான பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறிய அவர், கச்சத்தீவின் உரிமைகளை திரும்ப ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வரவில்லை என்றும், அப்படி கோரிக்கை வரும்பட்சத்தில் இலங்கை வெளியுறவுத்துறை பதில் அளிக்கும் என்றும் ஜீவன் தெரிவித்துள்ளார்.