பேருவளை நகர சபைக்குற்பட்ட பிரதேச வீடுகளில் உள்ள கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதில் பேருவளை நகர சபை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை இதுவரை காலமும் கொட்டப்பட்டு வந்த மருதானை வத்ஹிமிராஜபுரயிலுள்ள நகர சபைக்குச் சொந்தமான காணியில் குப்பைகளை இதுவரை காலமும் கொட்டி வந்தது.
இதனால் அப்பிரதேசத்தில் பாரிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த காணியில் தொடர்ந்தும் குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகர சபை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களையும், நலன் விரும்பிகளையும் சந்தித்து அண்மையில் கலந்துரையாடி இருந்தது.
நகர சபை செயலாளர் R.U.W. குணவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுகாதார பரிசோதகர் தாரக, பேருவளை நகர சபை உறுப்பினர் அரூஸ் அஸாத் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பேருவளை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களின் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளையும், குப்பைகளையும் வகைப்படுத்தல் மற்றும் அவற்றை சேகரித்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டன.
வீடுகளில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு நாட்களில் அவற்றை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும் அவற்றை நகரசபைக்கு அப்பாற்பட்ட பிரதேசத்திற்கு கொண்டு செல்லும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை இலகுப்படுத்துவதற்காக கட்டாயம் வீடுகளில் இருந்து குப்பைகளை வகைப்படுத்தி மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பான விழிப்புணர்வுகளை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறும் கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தவர்களிடம் செயலாளர் R.U.W. குணவர்தன கேட்டுக் கொண்டார்.
மேலும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் எதிர்காலத்தில் இத்திட்டத்தை குறைந்த விலையிலும், தரமான முறையிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை முன் வைத்தனர். இது தொடர்பில் ஆராய உள்ளதாக நகர சபைச் செயலாளர் தெரிவித்தார்.
பேருவளை நகர சபைக்குற்பட்ட வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் நீண்ட காலமாக பேருவளை நகர சபைக்கு சொந்தமான வத்ஹிமிராஜபுர காணியில் கொட்டப்பட்டு வந்தது.
இதன் மூலம் குறித்த பிரதேசத்தில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ந்து துர்நாற்றம் வீசியதோடு குறித்த பிரதேசத்தில் அடிக்கடி மழை நீர் தேங்கி காணப்படுவதனால் நீர், நிலம், வீதிகள் என்பதன மாசடடைந்து வருகின்றன. இதனால் குறித்த பிரதேச மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இது மாறியது.
நகரசபைச் செயலாளரின் கவனத்திற்கு இப்பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து குறித்த பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதை நகர சபை நிறுத்திக்கொண்டது.
பேருவளை நகர சபைக்குற்பட்ட பிரதேசத்தில் ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில் மாற்றுதிட்டங்களை தற்பொழுது பரிசீலித்து வருவதாகவும், நீண்ட காலத்திற்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ரூமி ஹாரிஸ்.