இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாக இப்தார் நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில் ருஹுனு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் தடவையாக இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
‘இப்தார் அல் வஹ்தா எனும் ‘ஒற்றுமையின் இப்தார்’ நிகழ்வு நேற்றையதினம் (02) பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பல்லின மாணவர்களையும் இணைக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்விசார் ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸின் பிரதிநிதி அக்தர் ஸர்ஸம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பல்கலைக்கழகச் சூழலில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன சிறப்புரையாற்றினார்.
ருஹுனு பல்கலைக்கழகம் ஒருபோதும் இனமத பேதங்களை வெளிப்படுத்தியதில்லை, மாறாக இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுடன் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கட் போட்டியும் இந்தத் தொடரிலேயே நடைபெற்றது.
இலங்கையில் அனைத்து இன மாணவர்களும் சமமாகக் கற்கின்ற தேசிய பல்கலைக்கழகம் உருவாக வேண்டும்.
அரசியல்வாதிகளின் பொறிக்குள் சிக்கி நாம் இன ஐக்கியத்தைச் சிதைத்து விடக் கூடாது. தோல்வியடைந்த கடைசிப் பரம்பரையாக நமது தலைமுறை இருந்து விடட்டும் என்றார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜே. அமரசிங்க உரையாற்றும் போது முஸ்லிம் மாணவர்கள் நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தருமாறு முன்வைத்த கோரிக்கைக்கு நான் உடனடியாக அனுமதியளித்தேன். அதற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்த விதம் என்னை நெகிழச் செய்தது என்றார்.
கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி இக்ரம் பாஸி மற்றும் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் நளீமி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
மாத்தறை முஸ்லிம் மாணவர்களின் களிகம்பு மற்றும் கஸீதா நிகழ்ச்சிகளும் தன்வீர் மாணவர் அஹமட் அய்யாஷின் விரிது கானமும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றுவதாக அமைந்திருந்தன.
முதற்தடவையாக நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்வதில் முன்னின்று உழைத்த ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க, இந் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றதையிட்டு தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.
பஹன மீடியா பிரைவேட் லிமிடெட், முஸ்லிம் எய்ட் அமைப்பு மற்றும் அமேசான் கல்லூரி இணைந்து இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தன.
இன மத பேதங்கள் பாராது மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் முழுமையாகப் பங்கேற்றிருந்ததோடு, முஸ்லிம்களின் கலாச்சாரத்தையொட்டிய மருதாணி அலங்காரங்களை கைகளில் இட்டுக் கொள்வதிலும் பெரிதும் ஆர்வம் காட்டினர்.
இப்தாரின் நோக்கத்தையும் நன்மைகளையும் அடுத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
‘முஸ்லிம்கள் எப்படி நோன்பு துறக்கின்றார்கள், அவர்கள் எவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள் என்பதை அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் அழகை எளிமையாகக் காட்டுவதற்கும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கும் இந்த ஒற்றுமையின் இப்தார் வாய்ப்பாக அமைந்ததாக மாணவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.