பிரதான அரசியல் கட்சிகள் அவர்களுக்கான மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களை மே தின பேரணிக்காக தலைநகர் கொழும்புக்கு அழைத்து வர சுமார் 1000 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இம்முறை மே தின பேரணிகள் மூலம் தமது மக்கள் பலத்தையும், அரசியல் பலத்தையும் வெளிப்படுத்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய தொகையை செலவிட்டு வருகின்றன.
மே தின பேரணிக்காக பங்குபற்றவுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகளுக்கான பேருந்து மற்றும் உணவுகளை வழங்குவதற்காகவே இந்த 1000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகைக்கு மேலதிகமாக விளம்பர பலகைகள், மே தின பேரணி இடம்பெறும் இடங்களில் மேடை, மேடை அலங்காரங்கள், ஒலிவாங்கி போன்ற தேவைகளுக்காக பிரதான கட்சிகள் மூலம் மேலும் இலட்ச கணக்கில் செலவிடப்படவுள்ளதாக கணக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவிலான மக்கள் மற்றும் பேருந்துகள் கொழும்பு, களுத்தறை, கம்பஹா மாவட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாகவும் கொழும்புக்கு மிக அருகிலுள்ள குறித்த மாவட்டங்களின் ஒரு தேர்தல் தொகுதியிலிருந்து , ஒரு பிரதான கட்சி சார்பில் சுமார் 25 பேருந்துகள் மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து 10 தொடக்கம் 15 பேருந்துகள் பொது மக்களை அழைத்து வர பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளன.
மேல் மாகாணத்துக்கு சொந்தமான மாவட்டங்களிலிருந்து வருகைத் தரும் பேருந்து ஒன்றுக்காக 30,000 தொடக்கம் 35,000 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது.
இதற்காக பிரதான அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி போதுமானதாக இல்லை என்பதால் வணிகர்கள், செல்வந்தர்கள் போன்றவர்களிடமிருந்து நிதியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற பிரதான கட்சிகளுக்கு மேலதிகமாக ஏனைய சிறிய கட்சிகளும் மே தின பேரணிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
தேசிய மக்கள் சக்தி கொழும்பைத் தவிர மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் மே தின பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.