கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை, போதிய இடவசதி மற்றும் வகுப்பறைகள் இல்லாமை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இல்லாமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்தார்.

முஸ்லிம் மாணவர்களின் பற்றாக்குறையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்த அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் சுமார் 19 முஸ்லிம் பாடசாலைகளும் களுத்துறையில் 70 பாடசாலைகளும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
