இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பார்த்தால் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீட்டித்து வருகிறது. இதனால் காசா மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மறுபுறம் இஸ்ரேல்- ஈரான் இடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பு மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது.
இதற்கிடையே அணு ஆயுதங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஈரான் அளித்துள்ள வார்னிங் பகீர் கிளப்பியுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் ஒருவர், இஸ்ரேலுடன் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பாகவும் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாகவும் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதாவது இஸ்ரேலால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால் யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஈரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும் என்று அந்நாட்டு உட்சபட்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் சில முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஈரானும் பதிலடி கொடுத்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அங்குப் பதற்றம் அதிகரித்தது.
அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஈரான் பேசுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2021இல் அணு ஆயுதங்களை உருவாக்க உள்ளதாக ஈரான் கூறியிருந்தது.