ஈரான் ஜனாதிபதி மொஹமட் இப்ராஹிம் ரைஸியின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த பிரேரணையை முன்வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இறுதி வெளிநாட்டு அரச தலைவர் ஈரான் ஜனாதிபதி என்பதையும் ரணதுங்க நினைவு கூர்ந்தார்.
உமா ஓயா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த அமைச்சர், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தனது அனுதாபத்தை தெரிவிக்க முன்வந்தார்.
அதன்படி, சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு நிமிடம் மெளனமாக இருந்து அஞ்சலி செலுத்தியதையடுத்து, சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியன.
இதேவேளை, ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த அனுதாபங்களை சபையில் தெரிவித்தார்.