ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார்.
ஈரானிய கொடி போர்த்திய மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடங்கிய பேழைகள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை.
‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி பிரார்த்தனையின்போது தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.
ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.