ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி பயணம் செய்வதற்கு பயன்படுத்தும் ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது.
அந்த அணை திறப்பு விழாவிற்காக அவர் இன்று அசர்பைஜான் சென்று அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் ஜனாதிபதி நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதிக்கு செல்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.