உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு குறித்த சட்டமூலம் தொடர்பில் தெளிவுகளை பெற்றுக்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் சட்டமூலம் தொடர்பான அறிமுகத்தை மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன வழங்கியதோடு சட்டமூலத்தின் விரிவான விளக்கத்தை சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி யஸ்மதா லொகுநாரங்கொட வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத், உதவி மாவட்ட செயலாளர் திருமதி கங்கானி கருணாரத்ன மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1983 மற்றும் 2009க்கு இடையில் இடம்பெற்ற யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட ,இலங்கை முழுவதும் பரவியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கு செவிசாய்த்து, அவர்கள் எதிர்கொண்ட உண்மை நிலையை இனம் கண்டு, அதற்கான தீர்வு ஒன்றை வழங்குவதற்காகவும், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை இல்லாதொழிக்கவும் உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக இலங்கையின் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற புதிய ஆணைக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பூர்வாங்க பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்கால செயலகம், இது தொடர்பான கருத்துருவை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானியின் இரண்டாம் பகுதிக்கு கூடுதல் இணைப்பாக ஜனவரி 1ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
மேற்படி வரைவோலையை www.documents.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இச் சட்ட வரைபு தொடர்பான மேலும் பல அர்வுகள் நாளைய தினமும் இடம் பெறவுள்ளதால் சிவில் சமூக பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை வழங்க முடியும்.