ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் உண்மையிலேயே ஐ.எஸ் சந்தேகநபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர்.
இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் சில நாட்களிற்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர்.
அவர்களிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த நபருக்காக காத்திருந்தவேளை இவர்கள் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபாரிஸ் மற்றும் முகமது ரஷ்தீன் என்பது தெரியவந்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளோம் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.